`வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' - ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்!
2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சினிமா மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 13-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி விருதுகளை வழங்கவிருக்கிறார்.
சீரியல் ஏரியாவைப் பொறுத்தவரை சிறந்த சீரியல்கள், ஹீரோ, ஹீரோயின்கள், வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல கேட்டகிரிகளில் விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சேனல் வரலாற்றிலேயே முதன் முறையாக டி.ஆர்.பி யில் பெரிய வரவேற்பை பெற்ற ‘செம்பருத்தி' தொடருக்கு சிறந்த தொடருக்கான விருது மற்றும் அதில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ், ஹீரோயினாக நடித்த சபானா, தொடரில் அறிமுக நடிகராக வந்த கதிர் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதேநேரம் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரியா ராமன் மற்றும் வில்லியாக நடித்த ஊர்வம்பு லட்சுமி இருவருக்கும் விருது இல்லை.
இவர்களில் லட்சுமி இது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.

ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்?
தன்னுடைய யூ டியூப் சேனலில் ஆவேசமாகப் பேசிய அவர், ‘அந்த சீரியலுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சேன். அந்த சீரியல்ல நடிச்ச காலத்தை தவக் காலம்னு சொல்லலாம். ஆனா எப்படி என்னை தேர்ந்தெடுக்காமப் போனாங்கன்னு தெரியலை. விருது கமிட்டியில இருக்கிறவங்க தங்களுக்கு வேண்டிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு மட்டும் அறிவிச்சிருக்காங்க. சின்னத்திரை நடிகர் சங்கத்தினர் என்ன செய்திட்டிருக்காங்க. சங்கத்துல சேரச் சொல்றீங்களே, அதனால ஆர்ட்டிஸ்டுகளுக்கு என்ன பயன்?
பரிந்துரை பண்றவங்க தர்ற லிஸ்ட்டை கண்ணை மூடிக்கிட்டு அரசும் ஓ.கே சொல்வது ஏன்? ரொம்ப அநியாயம் இது. நான் நல்லா நடிச்சிருந்ததால எனக்கு விருது இல்லைன்னா நான் கேக்கதான் செய்வேன். இனிமேலாவது இந்த மாதிரி நடந்துக்காம நேர்மையா விருது வழங்க முயற்சி செய்யுங்க. அப்பதான் அந்த விருதுக்குப் பெருமை" எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசி இருந்தார்.

விருதுக்கான தேர்வுக் குழு கமிட்டியில் சின்னத்திரை நடிகர் சங்கப் பிரதிநிதிகள் இடம் பெறுவார்களா? அவர்கள் பரிந்துரை செய்கிறவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றனவா? என சின்னத்திரை நடிகர் சங்க பொதுச் செயலாளர் நவீந்தரிடம் கேட்டோம்.
`நானும் வீடியோ பார்த்தேன்; இதெல்லாம் உண்மை இல்ல'
‘’நானும் லட்சுமி மேடம் வீடியோ பார்த்தேன். ஒரு ஆர்ட்டிஸ்ட்டா அவங்க உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. நல்லா நடிச்சு விருது கிடைக்கலைன்னா யாருக்குமே ஆதங்கம் இருக்கதான் செய்யும்.
அதேநேரம் சின்னத்திரை நடிகர் சங்கம் பத்தி அவங்க பேசியிருந்ததுல சில விஷயங்களைச் சொல்லி ஆகணும். நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் தேர்வுக்குழுவுல இடம் பிடிக்கறது வழக்கம்தான். ஆனா பொதுவா விருதுக்கு விண்ணப்பிக்கறது சம்பந்தப்பட்ட சீரியலின் தயாரிப்பு தரப்பினர்தான்.
அதனால் சின்னத்திரை நடிகர் சங்கம் விரும்புகிறவங்களுக்கு மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கும்கிறது உண்மை இல்ல.

அதேபோல வருஷக்கணக்குல கொடுக்காம மொத்தமா சேர்த்து கொடுப்பது குறித்தும் விமர்சனம் செய்திருந்தாங்க அவங்க.
சின்னத்திரை விருதுகள் முதன் முதல்ல கலைஞர் கருணாநிதி ஆட்சியில அறிமுகப்படுத்தப் பட்டது. பிறகு வந்த அதிமுக ஆட்சியிலதான் கிடப்புல போட்டுட்டாங்க.
இப்ப மீண்டும் வந்த திமுக ஆட்சியிலதான் இப்படியே விட்டுடக் கூடாதுன்னு முயற்சி எடுத்து அறிவிச்சிருக்காங்க.
மத்தபடி லட்சுமி சிறந்த நடிகை. அவங்களுக்கு இந்த வருஷம் விருது கிடைக்கலைங்கிறதுல எனக்குமே வருத்தம்தான்’’ என்கிறார் இவர்.



















