`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்...
Tamil Nadu State Awards: "வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்"- சின்னத்திரையினர் கோரிக்கை
2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நடிகர்கள் ராஜேஷ், மாரிமுத்து, பாலா சிங், இயக்குநர்கள் எஸ். ராஜசேகரன், எஸ்.என்.சக்திவேல் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மறைந்து விட்ட நிலையில், இவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், அரசு வழங்கும் விருதுகளை உரிய காலகட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சின்னத்திரை நட்சத்திரங்கள் எழுப்புகின்றனர்.

''இப்ப 2014 ஆம் வருஷத்துல இருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் அதாவது ஒன்பது வருஷ விருதுகளைச் சேர்த்துக் கொடுக்கிறாங்க.
23 ஆம் வருஷத்துல இருந்து 25 ஆம் வருஷம் வரைக்கான விருதை எப்ப தருவாங்க தெரியலை.
எங்க கோரிக்கை என்னன்னா, தனியார் விருதுகளாவது ஸ்பான்சர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுனு நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கிறதால் தாமதமான அதுல அர்த்தம் இருக்குனு ஏத்துக்கலாம்.
அரசு தர்ற விருதை அந்த வருஷத்துக்கான விருதை அடுத்த வருஷ தொடக்கத்துலயே கொடுத்திடுறதுல என்ன சிக்கல் இருக்கப் போகுது?
கமிட்டி போட்டுதான் தேர்வு செய்யப் போறாங்க. இதுல எதுக்கு இவ்வளவு தாமதம் தெரியலை. நாங்க குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்லல. ஆனா இந்தத் தாமதெல்லேம் ரொம்ப டூ மச். இனி வருங்காலங்களிலாவது இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கணும்'' என்கிறார்கள் அவர்கள்.

''தவிர, எந்தவொரு ஆர்ட்டிஸ்ட்டும் வாழ்ந்திட்டிருக்கிற நாள்களில்தான் அங்கீகாரத்தை விரும்புவாங்க. அவங்க கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு அங்கீகாரமா ஒரு அரசு விருது கிடைக்குதுனா அது அவங்க வாழ்ந்திட்டிருக்கிறப்பவே கிடைச்சாதான் விருதுக்கும் பெருமை, ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பெருமை.
இதையும் அரசு கவனத்தில் கொள்ளணும். இப்ப விருதுக்குத் தேர்வாகியிருக்கிறவங்க பட்டியல்ல டைரக்டர் ராஜசேகர், எஸ்.என்.சக்திவேல், நடிகர்கள் பாலா சிங், மாரிமுத்து, ராஜேஷ் இவங்க எல்லாமே இப்ப இல்லை. எனவே வரும் காலங்களில் இந்தக் கால்தாமதம் தடுக்கப்பட்டா நாங்கெல்லாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம்" என்கிறார் நடிகர் சாய் சக்தி.



















