என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!
சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொருளாகியிருக்கிறது.
2016 சட்டமன்றத் தேர்தல் முதல் களம்காணுகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரைக்கும் எந்தவொரு வெற்றியையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலாவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எப்படியாவது எம்.எல்.ஏ-வாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுகிறார்கள், அக்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில் அ.தி.மு.க, தி.மு.க களமிறங்காத காரைக்குடி சட்டமன்றத் தொகுதிதான் நா.த.க-வின் முதல் தேர்வாக இருக்கிறது, அதனை வரும் பிப்ரவரி 21-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது, பா.ஜ.க-வின் டெல்லி தலைமை. அதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பா.ஜ.க சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க சீனியர்கள், "நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பார்கள். அதிலும் பா.ஜ.க போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள். அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் காரைக்குடியில் உறுதியாக பா.ஜ.க களமிறங்குவதால் அவர் அங்கே கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. சோஷியல் இன்ஜினீயரிங் வியூகங்களை மேற்கொள்ளவும் ஆயத்தமாகிறது பா.ஜ.க. காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாலும் காங்கிரஸும் வலுவாக இருப்பதால், வாக்குகள் தாறுமாறாகப் பிரியும். அதை பயன்படுத்தி வெற்றிபெறுவதற்கு பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது" என்றனர்.

அரசியல் பார்வையாளர்கள் சிலரோ, ``நா.த.க-வையும் சீமானையும் பொதுவெளியில் அண்ணாமலை பாராட்டினாலும், இளைஞர்கள் சீமான் பின்னால் திரள்வதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே சீமான் வென்றுவிடக் கூடாது என்பதில் உறுதிகாட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே நா.த.க முகாமில் அதிர்ச்சி பற்றிக் கொண்டிருக்கிறது" என்றனர்.













