என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!
மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது' என ஐஸ் வைக்க, மேயர் பிரியா உள்ளர்த்தத்தோடு வெட்கப்பட்டு குலுங்கி சிரித்த சம்பவம், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் பேசி முடித்திருந்தனர். அந்த சமயத்தில் IUML கட்சியைச் சேர்ந்த 61 வது வார்டு உறுப்பினர் பாத்திமா எழுந்து பேசுவதற்கு நேரம் கேட்கவே மேயர் பிரியாவும் அவரை பேச அனுமதித்தார்.
IUML கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாத்திமா தொடர்ந்து, 'இன்னும் இரண்டு மாதத்தில் இந்த அவையில் இருக்கும் பலரும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அந்தளவுக்கு திறன் படைத்த பலரும் இங்கே இருக்கிறார்கள். என்னால் அவர்களின் பெயர்களை கூட சொல்ல முடியும்' என்றார். உடனே துணை மேயர் மகேஷ் குமார் இடைமறித்து, 'மேயர் பிரியா சிரிக்கிறார் பாருங்கள்' என்றார். உடனே அரங்கமே கலகலப்பானது. 'மேயர் பிரியா என் மகளைப் போன்றவர். சிங்கப்பெண்ணாக அவரை மாநகராட்சியின் மேயர் ஆக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கும் ப்ரமோஷன் கிடைக்கும்' எனக் கூறவே அரங்கத்தில் சிரிப்பலை.

தொடர்ந்து பேசியவர் தன்னுடைய வார்டின் கோரிக்கைகளை வரிசையாக அடுக்கினார். மீண்டும் இடைமறித்த துணை மேயர் மகேஷ் குமார், 'நல்லா பக்குவமா பேசுறீங்கம்மா...மகள் மாதிரி சிங்க்பெண் மாதிரினுலாம் சொல்லிட்டு நைசா உங்க கோரிக்கையையெல்லாம் அடுக்குறீங்களே..' என்றார். உடனே பாத்திமா, 'அவர் பிரமோஷன் ஆகிப் போவதற்குள் இதையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகிறேன்' என்றார் சிரித்துக்கொண்டே. உடனே கூட்டத்திலிருந்த இன்னொரு உறுப்பினர், 'துணை மேயர் அண்ணனும் ப்ரமோஷனுக்குத்தான் ட்ரை பண்றாரு' என கமென்ட் அடிக்க, அரங்கம் மொத்தமும் வெடித்துச் சிரித்தது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேயர் பிரியா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களாகவே அறிவாலய வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.













