'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்
திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!
திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மரக் கட்டைகள் பாதுகாக்கப்பட்டு, விற்பனைச் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா போன்ற எல்லைப் பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200 டன்னுக்கும் அதிகமான செம்மரக் கட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கில், வனத்துறை ஊழியர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி நள்ளிரவு, கிடங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுமார் 1,750 கிலோ எடையுள்ள 55 செம்மரக் கட்டைகளை திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் (19-ம் தேதி) காலையில், கிடங்கு அலுவலர் ஜோதிலிங்கம் வழக்கமான ஆய்வு மேற்கொண்டபோதுதான் இந்த திருட்டுச் சம்பவம் வனத்துறையினருக்குத் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக, ஜோதிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருடுபோன செம்மரக் கட்டைகளை மீட்க வனத்துறை சார்பிலும் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 குழுக்களிலும் 22 பேர் இடம்பெற்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலையில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில், `கோடை விழா’ நடத்தப்பட்டது. இதில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கலந்துகொண்டார். மாவட்டத்தில் துறை அமைச்சர் இருந்தபோதே, அரசு வனத்துறைக்குச் சொந்தமான குடோனில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் திருடுபோனது, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


















