``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நட...
``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்களை துணிச்சலாக தெரிவித்துள்ளார்.
ஜெயாபச்சனிடம் திருமணம் என்ற ஒன்று காலாவதியாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, ஜெயா பச்சன் அதனை ஒப்புக்கொண்டார்.
நான் இப்போது பாட்டியாகிவிட்டேன். எனது பேத்தி நவ்யாவுக்கு 28 வயதாகப் போகிறது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்க எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
இப்போது நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். திருமண உறவுகள் வேகமாக மாறிவருகின்றன. திருமண நடைமுறைகள் காலாவதியாகிவிட்டது'' என்று தெரிவித்தார்.

உடனே உங்கள் பேத்தி நவ்யா நீங்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ''எனது பேத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பமாட்டேன். இளம் தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவியுங்கள்!
சட்டப்பூர்வ திருமணம் எந்த ஒரு உறவையும் வரையறுக்கவில்லை'' என்று தெரிவித்தார். திருமணத்தை லட்டோடு ஒப்பிட்டு பேசிய ஜெயா பச்சன், லட்டை சாப்பிட்டால் உங்களது உடம்புக்கு நல்லது கிடையாது. அதேசமயம் சாப்பிடாவிட்டாலும் வருத்தப்படுவீர்கள். அதே போன்றதுதான் திருமணமும்' என்று குறிப்பிட்டார்.
புகைப்பட பத்திரிகையாளர்களை மீண்டும் ஜெயா பச்சன் சாடினார். தனக்கும் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித உறவும் இல்லை. எனது கல்வித்தகுதி குறித்து கேட்கிறார்கள். மோசமான இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு கையில் மொபைலுடன் வெளியில் செல்பவர்கள் தங்களது கண்ணில் படுவதை போட்டோ வீடியோ எடுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறார்கள்'' என்றும் குறிப்பிட்டார்.

ஜெயா பச்சன் தனது பேத்தி நவ்யாவின் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்.
தனது கணவர் அமிதாப்பச்சன் குறித்து பேசுகையில்,''எனது கணவர் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார். தனது கருத்தை தன்னுள் வைத்துக்கொள்வார். தக்க நேரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்துவார். ஆனால் நான் அப்படி கிடையாது. ஆனால் அவர் மிகவும் வித்தியாசமானவர் எனவேதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். என்னைப் போன்ற ஒருவரை நான் மணந்திருந்தால் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் பிருந்தாவனத்தில் இருப்பார் நான் வேறு எங்காவது இருப்பேன்!" என்று கூறினார்.




















