கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!
திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!
ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 2013-ம் ஆண்டு இறந்து போனார். இதையடுத்து பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கார்மேகம் வேலைக்காக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் நிலையில், கஸ்தூரிக்கும் பரமக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்மேகம், கஸ்தூரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கஸ்தூரி - முருகேசன் இடையேயான தொடர்பு தொடர்ந்துள்ளது.


இதனால் கஸ்தூரியை தான் வேலை பார்க்கும் ராமேஸ்வரம் ஆய்வு மாளிகைக்கு இன்று வரவழைத்துள்ளார் கார்மேகம். அங்கு வந்த கஸ்தூரியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு, கொலை செய்த கத்தியுடன் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் கார்மேகம்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த கார்மேகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மண்டபம் முகாமில் அகதிகள் இருவருக்கு இடையே மது போதையில் எழுந்த தகராறில் கவிராஜ் என்பவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த நாள் ராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, ஒரு தலை காதலால் முனியராஜ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மறுநாள் பாம்பனில் தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் சமையல் மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று வரம்பு மீறிய தொடர்பில் இருந்த பெண் ராமேஸ்வரத்தில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் காவல் சரக பகுதியில் தொடரும் கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
















