தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம...
திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, மலைமீது ஏற வனத்துறைத் தடை விதித்திருக்கிறது.
இந்த நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகர் அருண்பிரசாத் ஆகியோர் தடையைமீறி மலை உச்சிக்கு சென்று வந்தனர். மேலும், இருவரும் மலை ஏறிச் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு வைரலாகி, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினரின் கவனத்துக்குச் சென்றது.

இதையடுத்து, தடையை மீறி தீபமலை மீது ஏறிய நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண்பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர், வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரையும் அழைத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அர்ச்சனாவும், அருண்பிரசாத்தும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தனர்.
மேலும், இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், `மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பினர். வனத்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போட்டோ, வீடியோக்களையும் உடனடியாக நீக்கினார் நடிகை அர்ச்சனா.


















