Gold Rate: 'கொஞ்சம்' ஏற்றத்தில் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில்: பேரெழில் தரிசனம்; திருமணம் கைகூடும்!
ராமபிரான் திருவழகைக் கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்றால் வடுவூருக்குச் செல்லுங்கள் என்பார்கள் பெரியோர்கள். அந்த அளவுக்கு சாரங்கபாணியாக தாய் சீதையுடன் பேரழகுடன் திகழ்வார் வடுவூர் ராமர். இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம்.
`பஞ்ச ராம க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் தலங்களில் முதன்மையானதும் இதுதான். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். அதாவது தஞ்சை- மன்னார்குடி சாலையில், சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவு. ஸ்ரீராமர் கோதண்டராமராக எழுந்தருளியிருக்கும் வடுவூர் ஆலயம்.

இத்தல ராமருக்கு ஊர் சிறப்பு உண்டு. ராமபிரான் வனவாசத்தின் போது கண்வ மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். கண்வரும் பிற ரிஷிகளும் ஸ்ரீராமரின் சாந்நித்தியத்தில் மகிழ்ந்திருந்தனர்.
ஒருநாள் ராமபிரான் தன் பயணத்தைத் தொடரப் புறப்பட்டபோது, ‘`உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே, எங்களுடனேயே இருங்கள்" என்று கண்ணீருடன் வேண்டினர்.
மறுநாள் அந்த அதிசயம் நடந்தது. ஆஸ்ரம வாசலில் அழகும் கம்பீரமும் கொண்டு ஸ்ரீராமனைப் போலவே நின்றது ஒரு சிலை.
‘`இந்தச் சிலை திடீரென எப்படி வந்தது இங்கே?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு ஸ்ரீராமபிரான், ‘`உங்களுக்காக என்னுடைய உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். இந்தச் சிலையில் நான் எப்போதும் வாசம் செய்வேன்’’ எனக்கூறி ஆசி வழங்கிப் புறப்பட்டார். அப்படி ஸ்ரீராமரே வடித்துக்கொடுத்த அற்புதத் திருமேனிதான் வடுவூர் உற்சவமூர்த்தி என்கிறது தலபுராணம்.
கால வெள்ளத்தில் அந்தத் திருமேனி இருக்கும் இடம் தெரியாமல் போக, கலியுகத்தில் தான் வெளிபட்டு அருள்பாலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அறிந்தார் ஸ்ரீராமர். அப்போது ராம பக்தனான, தஞ்சையை ஆட்சி செய்த மன்னரின் கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினாராம். மன்னர் பரிவாரங்களோடு விரைந்து வந்தார். அழகு ராமனைக் கண்டு சிலிர்த்துப்போனார். கண்ணீர் பெருக பலவாறு வணங்கித் தொழுதார்.

`இந்த ஸ்வாமியை தஞ்சைக்குக் கொண்டு செல்லலாம்’ என்று பெரியவர்கள் ஆலோசனை சொன்னார்கள். மன்னனும் ஆமோதித்தார். தஞ்சைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ராமனின் திருவுளமோ வேறுவிதமாக இருந்தது.
பயணத்தின் நடுவே இரவில் வடுவூரில் தங்கினார்கள். ராமரைத் தரிசித்த அவ்வூர் மக்கள், ராமபிரானின் விக்கிரகத்தைத் தங்கள் ஊரிலேயே எழுந்தருளச் செய்யும்படி வேண்டிக்கொண்டார்கள். மன்னர் அவர்களின் பக்தியையும் வேண்டுதலையும் கண்டு மகிழ்ந்தார். ராமபிரானை வடுவூர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து வடுவூர் கிராமமே செழித்தோங்கியது.
வடுவூர் கோதண்டராமர் ஆலயத்தின் தீர்த்தம் - சரயு புஷ்கரணி. இந்தத் தீர்த்தக் குளத்துக்கு அருகிலேயே மிகப் பெரிய ஏரி ஒன்றும் உள்ளது. ஆண்டுதோறும் இங்கே விழாக்களும் வைபவங்களும் சிற்பபுற நடைபெறுகின்றன.
தை, மாசி மாதங்களில் தெப்போற்ஸவம் விசேஷம். மேலும், பங்குனி புனர்பூச நாளில் தொடங்கி 10 நாள் விழாவாகச் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது பிரம்மோற்ஸவம். 9-ம் நாளன்று தேரோட்டம்; இங்கேயுள்ள தேரும் பிரமாண்டம்தான்! சிறு சிறு சிற்பங்களாகத் திகழும் ராமாயனக் காட்சிகள், தேரின் சிறப்பம்சம்!
இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரும், தேரடியில் உள்ள அனுமனும் கல்வி மற்றும் தைரியத்தை வழங்கி அருள்பாலிக்கின்றனர் என்கிறார்கள் பக்தர்கள். வியாழக்கிழமையில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட... கல்விச் செல்வம் கிடைக்கும் என்பர்.

இங்கே, ஸ்ரீகோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள விரைவில் காரியம் கைகூடுமாம். பிரார்த்தனை நிறைவேறியதும் தாங்கள் வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனைச் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இன்னொரு விசேஷம்... சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் பதவி உயர்வு, தொழில் விருத்தி, திருமண பாக்கியம் ஆகியன கைகூடும் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் புனர்பூச நாளில் மூலவருக்கு திருமஞ்சனம் செய்வது சிறப்பு! ஆடி வளர்பிறை ஏகாதசி துவங்கி ஆவணி பூரட்டாதிவரை உற்ஸவரின் திருமேனியில் உள்ள கவசங்கள் அகற்றப்பட்டிருக்குமாம். அப்போது உற்ஸவருக்கு திருமஞ்சனம் நடைபெறும் காட்சியைத் தரிசிப்பது மிகுந்த புண்ணியம் என்கிறார்கள்.
இங்கே சீதா கல்யாணம் செய்து வைத்துப் பிரார்த்தித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; நற்குணம் வாய்ந்த கணவன் கிடைப்பான்; இல்லறம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
மன்னார்குடி திருவாரூர் செல்லும் அன்பர்கள் தவறாமல் வடுவூர் கோதண்டராமரையும் தரிசனம் செய்து வாருங்கள். ராம தரிசனம் உங்கள் வாழ்வை வளமாக்கும் நலமாக்கும்.





















