ஜீன்ஸ் பேன்ட்டில் குட்டி பாக்கெட் எதற்கு? இது தெரியாமப் போச்சே?! - 2
கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி கிராமம் பூதலிங்க சுவாமி: பூதகணங்கள் கட்டிய சிவாலயம்!
பஞ்ச பூதத் தலங்கள் என்று காஞ்சி, திருவண்ணாமலை, திருக்காளகஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய தலங்களைக் குறிப்பிடுவார்கள்.
இந்த ஐந்து தலங்களிலும் ஈசனை வழிபட்ட புண்ணியம் அருளும் தலம் ஒன்று உண்டு. அதுதான் நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் பூதப்பாண்டி கிராமத்தில் அருளும் பூதலிங்க சுவாமி திருக்கோயில். இங்கே ஈசன் பஞ்ச பூதங்களின் அம்சத்தையும் ஒருங்கே கொண்ட ஈசனாக அருள்கிறார்.
பூத கணங்களால் உருவாக்கப்பட்ட கருவறை இது. இப்போதும் பஞ்சபூதங்கள் உள்ளிட்ட பல்வேறு பூத கணங்கள் இக்கோயிலைக் காவல்காத்து வருவதாக ஐதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குடைவரைக் கோயில்களில் குறிப்பிடத்தக்கது இந்த ஆலயம்.
`திருமலை’ எனும் குன்றின் பாறையில் குடைவரையாக கருவறை திகழ்வதால், மூல ஸ்தானத்தைத் தனியே வலம் வர முடியாது. மலையோடு சேர்த்துதான் வலம் வர வேண்டும். எனவே இந்தக் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

அருள்மிகு பூதலிங்க சுவாமி குடைவரையாய்த் திகழும் கருவறையில் அருள்பாலிக்கிறார். இங்கே துவார பாலகர்களுக்குப் பதிலாக பூதகணங்கள் காட்சி தருகிறார்கள்.
மூலவர் பூதலிங்க சுவாமியின் லிங்கத் திருமேனி பாறையின் மீது சுயம்புவாகத் திகழ்வதால், ஆவுடைபோன்ற பகுதிகள் இல்லை. பூதலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் நேரடியாக கருவறைக்கு வெளியே செல்லும் விதம் உள்ளது.
குடைவரையில் சிவலிங்கத்தை பூதகணங்கள் உருவாக்கின என்பதால், மூலஸ்தானத்தின் மீது விமானம் இல்லை என்கிறார்கள் பக்தர்கள். அம்பாள் சந்நிதி பிற்காலப் பிரதிஷ்டை என்பதால் அதற்கு விமானம் உள்ளது.
இங்கே ஈசன் ருத்ர அம்சத்தில் இருப்பதால், பக்தர்கள் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள வாயில் வழியே நுழையமாட்டார்கள். அம்பாள் சந்நிதி வாயில் வழியாகவே வருவார்கள். அதேபோல் கோயிலுக்கு எதிரில் குடியிருப்புகளோ ஊரோ இருக்காது.
அகஸ்தியர் கால்வாய், பழையாறு, புத்தனாறு, தோவாளை சானல்னு ஆறுகளும் கால்வாய்களும்தான் தொடர்ந்து இருக்கும். ராமபிரான் தாடகையைக் கொன்ற பாவம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டதாக ஐதிகம்.
அப்படி ராமர் தவம் செய்த இடம் ஆலயத்தின் பின்புறம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே பாதுகா மண்டபத்தையும், ராமர் பாதத்தையும் தரிசிக்கலாம்
உள் பிராகாரத்தில் கன்னி விநாயகர், தேவியருடன் அருளும் முருகன், ஆதித்தன், சபாபதி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, தர்மசாஸ்தா ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
மேற்குக் கோபுர வாயில் வழியே நுழைந்தால் நினைத்ததை முடிக்கும் விநாயகரைத் தரிசனம் செய்யலாம். வெளிப் பிராகாரத்திலெயே சாஸ்தாவையும் தரிசிக்கலாம்.

மதுரையை ஆண்ட பூதபாண்டியனின் மகன் பசுபதி பாண்டியன். இவரின் வயிற்றுவலி, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்ட பிறகு குணமானதாம். ஆகவே, பூதபாண்டியன் இந்தக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளார்.
கோயிலை விரிவுபடுத்தி கட்டியவர், ஓர் ஊரையும் கட்டமைத்தாராம். மதுரையைப் போன்றே எட்டு இதழ் தாமரை வடிவில் அழகிய மணவாள பெருமாள் கோயிலை மையப்படுத்தி நகரை நிர்மாணித்தாராம். ஆகவே ஊருக்குப் பூதப் பாண்டி எனப் பெயர் வந்தது என்று சொல்வார்கள்.
ஆண்டிச்செட்டியார் என்பார் ஒருமுறை தாமதமாகக் கோயிலுக்குச் சென்றாராம். எனினும் வழிபாடு முடித்து அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்றுத் திரும்பினார். வரும் வழியில் ஓரிடத்தில் அதே அர்ச்சகரைக் கண்டார்.
தமக்கும் முன்னதாக இவர் இங்கே எப்படி வந்தார் என்று வியந்தவர் அவரை விசாரித்தபோது, `சரியான நேரத்தில் கோயிலில் நடை சாத்தி விட்டேனே. இன்று நீங்கள் ஏன் வரவில்லை?’ எனக் கேட்டாராம் அந்த அர்ச்சகர். அப்போதுதான் `இறைவனே வந்து பூஜை செய்து, பிரசாதம் கொடுத்திருக்கிறார்’ என்பதைப் புரிந்து கொண்டார் ஆண்டிச் செட்டியார்.
கோயிலுக்காக தன் 67 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை எழுதிவைத்தார். கோயில் கருவறைக்குச் செல்லும் வழியில் இந்தப் பக்தரின் சிலை இப்போதும் அமைந்துள்ளது.

இங்கே அமாவாசை கிரிவலம் மிகவும் விசேஷம். இந்தக் கோயிலின் தேர் அதிக எடை கொண்டது. இலுப்பைக் கட்டையால் செய்யப்பட்டது என்கிறார்கள். பூதப்பாண்டி கோயில் தேரில் வெளிச் சக்கரங்கள் நான்குடன் சேர்த்து மொத்தம் 11 சக்கரங்கள் உள்ளன என்கிறார்கள் பக்தர்கள்.
தை, சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகளும் இங்கே விசேஷம்.
நான்கு வாயில்களுடன் திகழ்கிறது இந்தக் கோயில். என்றாலும் வடக்குப்புற வாசல் திறக்கப்படுவதில்லை. கொடி மரம் பழுதானால் அதை மாற்றும் பொருட்டு வெளியே எடுத்துச் செல்லவும், புதிய கொடி மரத்தை உள்ளே கொண்டு வருவதற்காகவும் அந்த வாசல் திறக்கப்படுமாம்.
இப்படிப்பட்ட அற்புதமான சிவாலயத்தை ஒருமுறை தரிசனம் செய்துவாருங்கள். பஞ்சபூதங்களின் அருளும் கிடைக்க வாழ்க்கை வளமாகும்.


















.jpeg)

