`ஆணாதிக்கமும் அதிகார மோகமும் லட்சியங்களைச் சிதைத்துவிட்டன'- AMMA-விலிருந்து ரேவத...
தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?
தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள்சாமி தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் கருத்துகளுக்கு ஊடகங்கள் வாயிலாக பதிலளித்து வந்தார்.
குறிப்பாக அவர் கூறும்போது, "காமராஜர் பிறந்த நாளன்று தி.மு.கவினர் மாலை அணிவிக்க வரக் கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம்" என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில், மூன்று நாள்களுக்கு முன்பு பெருமாள்சாமியின் வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் ரூபராஜா என்பவர் சமூக வலைதளங்களில் பெருமாள்சாமியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பெருமாள்சாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.












