விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'-...
தூய்மைப்படுத்தும் சடங்கு: ``என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள்" - மல்லிகார்ஜுன கார்கே உருக்கம்!
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரகாண்ட் மாநிலம் ஹலத்வானி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஆகஸ்ட் 10) 'ஸ்ரீ ராம் சேனா தர்மார்த் சேவா நியாஸ் சங்கதன்' என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த மைதானத்தைப் புனிதப்படுத்தும் நோக்கில் 'ஹவன்' (ஓமம்) வளர்த்துச் சடங்குகளை நடத்தினர். கார்கேவின் கூட்டத்தில் எழுப்பப்பட்ட சில முழக்கங்கள் 'இஸ்லாமிய முழக்கங்கள்' போல் இருந்ததாக அவர்கள் நியாயப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) மாநிலங்களவையில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, ``நான் இதை ஒருபோதும் அரசியல் ஆக்க விரும்பியதில்லை. பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான், பட்டியல் சாதியைச் சேர்ந்தவன் என்றோ, தலித் என்றோ கூறி அனுதாபத்தையோ அல்லது பாதுகாப்பையோ கோரியதில்லை. எனக்குப் போராடும் வலிமை இருக்கிறது, போராடவும் செய்கிறேன்.
ஹலத்வானி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், நான் எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ குறிப்பிடாமல், அரசின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே பேசினேன். ஆனால், எனது உரைக்குப் பிறகு மேடையைச் சுத்தம் செய்து 'தூய்மைப்படுத்தும் சடங்கு' நடத்தியதன் மூலம் என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள். ஜனநாயக நாட்டில் இது முறையா? அரசியலமைப்பை இப்படித்தானா பாதுகாப்பீர்களா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

கார்கேவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, ``இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். இது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் சோகமான நிகழ்வு. பாஜக இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஆதரிப்பதில்லை. இச்சம்பவம் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் மன உணர்வுகள் காயப்பட்டதற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தைப் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய கார்கே, ``மேடையைத் தூய்மைப்படுத்தியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தீண்டாமை ஒரு பாவமில்லை என்றால், இந்த உலகத்தில் வேறு எதுவுமே பாவமில்லை. கட்சி அல்லது கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாம் அனைவரும் தீண்டாமையைக் கண்டிக்கிறோம்.
இங்கு எவரும் யாரையும் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தவறு செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை," என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ``இந்த மனநிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. பிரதமர் மோடி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
இதேபோல், கர்நாடக உள்துறை அமைச்சரும், கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே தனது சமூக வலைதளப் பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் இருக்கும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்நிலை என்றால், தினமும் சாதிய பாகுபாட்டை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான தலித் மக்களுக்கு இது என்ன செய்தியைச் சொல்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.















