PIN Code-ல் தேவநாகரி எண்கள்? ``மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்...
தென்காசி: சாலையில் கிடந்த 30 சவரன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்குக் குவியும் பாராட்டு
ஏழை விவசாயியான பாப்பையா என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில், நகை மற்றும் பணம் இருந்துள்ளன. அவற்றை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஒப்படைத்தார்.
தென்காசி மாவட்டம் அரியப்பபரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (68) இவர் பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 5000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அரியப்புரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரது கையில் இருந்த பை ஒன்று தவறி விழுந்தது. அதை அறியாமல் வீட்டுக்குச் சென்ற அவர் பொருட்களைச் சோதனை இட்டபோது 30 சவரன் நகை மற்றும் 5000 ரூபாய் ரொக்கப்பணம் வைத்திருந்த பை மட்டும் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. பதறிப்போன அவர் தங்கள் நடந்து வந்த வழியெங்கும் தேடிப் பார்த்தும், பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே, குருசாமிபுரத்திற்கு அருகில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாப்பையா என்ற 76 வயது முதியவர் ஆரியங்காவூர் வழியாக சைக்கிளில் சென்றபோது சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் அதிகளவு தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பதை கண்டு அந்தப் பையைப் பத்திரமாக மீட்டுள்ளார். அதில் நகை மற்றும் பணம் இருப்பதைக் கண்ட அவர் உடனடியாக வீட்டுக்குச் சென்று தனது மகனை அழைத்துக் கொண்டு பாவூர்சத்திரம் காவல் நிலையம் சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் வேல்கனியைச் சந்தித்து நடந்த விவரங்களை எடுத்துக் கூறி அந்தப் பையை ஒப்படைத்தார்.
நகை மற்றும் பணம் இருந்த பை காணாமல் போனதால் பதறிப் போன சுப்பிரமணியன் காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதியவர் பாப்பையா நகை பையை ஒப்படைத்து இருந்ததால் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான காவல்துறையினர் நகைக்கான அடையாளங்களைக் கேட்டு அதை உரியவரான சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் வேல்கனி கூறுகையில், "விவசாயி பாப்பையா என்பவர் வந்து, 'நான் சாலையில் சென்றபோது இந்தப் பையைக் கண்டெடுத்தேன். அதில் நகை பணம் இருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள பலரிடமும் கேட்டும் அந்தப் பை யாருடையது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நீங்கள் விசாரித்து உரியவரிடம் அடையுங்கள்' என்று எங்களிடம் கொடுத்தார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில், நகை பையைப் பறிகொடுத்த சுப்பிரமணியன், தனது நகை பையைக் காணவில்லை எனப் புகார் மனுவுடன் வந்தார். நகை பையின் அடையாளத்தையும் அதிலிருந்து நகையின் எடை மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை சரியாகத் தெரிவித்த சுப்பிரமணியன் அவற்றை முறைப்படி ஒப்படைத்தோம்" என்றார்.
அதை அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி-யான திருநாவுக்கரசு, விவசாயி பாப்பையாவை நேரில் வரவழைத்து, அவரின் நேர்மையைப் பாராட்டும் வகையில் சால்வை அணிவித்து கௌரவித்தார். இது குறித்த விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து விவசாயி பாப்பையாவின் நேர்மையைப் பாராட்டி பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


















