மதுரை: ஆலங்கட்டி மழையின் தாக்கம்; உதிர்ந்து கொட்டிய நெல் மணிகள்... விவசாயிகள் வே...
தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?
முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'
1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, தமிழக வரலாற்றில் தனித்த இடம் உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா ஆகிய மூவரும் களம் கண்ட தொகுதி. தற்போது திமுகவை சேர்ந்த மகராஜன் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டு தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுகவும் கடுமையாக வேலை செய்து வருகிறது.
தொகுதியில், முக்குலத்தோரும், பட்டியல் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாயக்கர், கவுண்டர், செட்டியார் சமூகத்தினர் தொகுதியில் பரவலாக இருக்கின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மகராஜனும், அதிமுகவில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர்.

கட்சிகளை பின்னுக்கு தள்ளி அண்ணன், தம்பி போட்டியாக இது பார்க்கபட்டது. இந்த முறை அதிமுகவில் வேறு வேட்பாளரை நிறுத்து வேண்டுமென கட்சியினர் போர்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் லோகிராஜன் திரும்பவும் சீட் கேட்பதோடு தொகுதி முழுவதும் கட்சி பணிகளை செய்து வருகிறார்.
கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்.
அமமுகவிற்கு தொகுதி ஒதுக்கபட்டால் டிடிவி தினகரகன் மனைவி அனுராதா நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

திமுக தரப்பில், சிட்டிங் எம்எல்ஏ மகராஜன் சீட் கேட்கிறார். புதிதாக கட்சியில் சேர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்தர்நாத், தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் வேட்பாளராக களம் இறங்குகிறார். தவெக-வை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வுக்கு பின் தான் வாக்குகள் குறித்து தெரியும் என்ற அளவில் தான் உள்ளது.
ஆண்டிபட்டியில் தேமுதிகவிற்கும் கணிசமான வாக்குகள் உள்ளது. இது திமுகவிற்கு கூடுதல் பலனளிக்கும் என்பதால் தற்போதைய நிலையில் மீண்டும் உதயசூரியனே உதிக்க வாய்ப்புள்ளது.!
2. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி
பெரியகுளம் தொகுதி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது என்பதால் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக சுமார் 300 ஏக்கரில் மாம்பழ விவசாயம் நடைபெறுகிறது. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் கரும்பு வெல்ல மார்க்கெட்டும் இருக்கின்றன.
பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிக அளவில் பட்டியலினத்தவர்கள் வசிக்கின்றனர். அதற்கடுத்து முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் சமூகத்தினர் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

தி.மு.க-வில் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணகுமார். ஆனால் தொகுதியில் அவர் மீது அதிருப்தி நிலவிவுதால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் அவருடைய கட்சியினர். அவருக்கு அடுத்தபடியாக வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா, திமுக வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-க்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த லாசர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அ.தி.மு.க-வில் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தவமணி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் ஜெயராமன், நகர மாவட்ட பிரதிநிதி எம் சுரேஷ், தென்கரை பேரூர் கழகச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள்.

அமமுகவில் கதிர்காமு சீட் கேட்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் விமலா என்பவர் வேட்பாளாராக களமிறங்குகிறார்.
தவெக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி ஆகியோர் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள்.
அதிமுக, திமுக இரண்டு தரப்பிலும் வேட்பாளர்களுக்கான தேர்வில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தொகுதியிலும் இரு திராவிட கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற நிலையே தற்போது உள்ளது. தவெக பிரிக்கும் வாக்குகளும் இங்கு வெற்றி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையே உள்ளது.
3. கம்பம் சட்டமன்ற தொகுதி
நெல், திராட்சை, வாழை விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக அமைந்திருக்கும் தொகுதி, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சட்டமன்றத் தொகுதி. கேரள எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள காபி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்காகவும் தொகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.
தொகுதியில், ஒக்கலிகக் கவுண்டர், முக்குலத்தோர் சமூகத்தினரே வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்களாகவும் அதற்கடுத்து இஸ்லாமியர்கள், நாயுடு, பட்டியல் சமூகத்தினர் தொகுதி முழுக்கப் பரவலாக இருக்கிறார்கள்.

தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் மீண்டும் சீட் கேட்கிறார். அவருக்கு வயதை காரணம் காட்டி தவிர்ப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சு உள்ளது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார். தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம் கட்சியினரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில், முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் சீட் கேட்கிறார்.

பா.ஜ.கவும் தொகுதியை கேட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு செல்வி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போதைய சூழலில், தி.மு.க வே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.
4. போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி
போடிநாயக்கனூர் தொகுதி மலைப்பகுதிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இங்குள்ள மலைக் கிராமங்களில் காபி, ஏலக்காய், மிளகு பயிரிடப்படுகின்றன. மலையடிவாரப் பகுதியில் இலவம் பஞ்சு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை களுக்குத் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு.

தொகுதியில், முக்குலத்தோர் மற்றும் பட்டியல் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அடுத்தபடியாக, செட்டியார், ஒக்கலிக கவுடர், பிள்ளைமார் சமூகத்தினர் பரவலாக இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அவரும் சீட்டு கேட்டு வருகிறார். அதேசமயம், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், போடி தி.மு.க நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர துணைச் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் சீட் பெற முயன்றுவருகிறார்கள்.
அ.தி.மு.க-வில், தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.டி.நாராயணசாமி, வாசு, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், பி.சி.பாண்டியன் அல்லது தண்டபாணிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர். சீ.கலைஅரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தவெக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சீட் பெற முயற்சித்து வருகிறார்.
தற்போதைய சூழலில், திமுகவே இங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது.!















