செய்திகள் :

"த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்!" - அமைச்சர் ராஜேஷ்குமார்

post image

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடு முழுக்க நடத்தி கவனம் ஈர்த்திருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமாரிடம் நடப்பு அரசியல் குறித்தான கேள்விகளை முன்வைத்தோம்...

" 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என காங்கிரஸ் விழிப்புணர்வு இயக்கம் நடத்துகிறது. த.வெ.க ஆட்சியிலோ, சாலைப் பணிக்கான தொகையை விடுவிக்க லஞ்சம், அரசு வழக்கறிஞர் பணி நியமனத்துக்கு லஞ்சம், செங்கல் சூளை அதிபர்களிடம் லஞ்சம் என்ற செய்திகள்தானே பரவலாக உள்ளது?"

"த.வெ.க ஆட்சியில் லஞ்சம், ஊழல் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், த.வெ.க உள்ளாட்சி மன்றத் தலைவர் வாங்கிய விஷயத்தில், உடனடியாக அவரைக் கட்சியை விட்டே நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார். 'மக்கள் நம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். எனவே தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சிப் பாகுபாடின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன்' என அமைச்சர்களிடமும் உறுதிபட தெரிவித்திருக்கிறார் முதல்வர். அதன்படியே செயல்பட்டும் வருகிறார்."

விஜய்
விஜய்

" 'தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது' என பெருமிதப்படுகிறார் மாணிக்கம் தாகூர். அப்படியென்றால், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின்போது கூட்டணி என்ற வகையில் ஊழலுக்கு உறுதுணையாக இருந்தீர்களா?"

"கடந்த காலத்தில், தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோமே தவிர, கூட்டணி ஆட்சியில் பங்கேற்கவில்லை. ஆனாலும்கூட, சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு எதிராக சட்டமன்றத்திலேயே நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தோம். அதேபோல், மின் கட்டண உயர்வு, தொழிலாளர் பணி நேரம் நீட்டிக்கப்பட்டது உள்ளிட்ட மசோதாக்களின் போதும் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆக, கூட்டணியில் மட்டுமே அங்கம் வகித்தாலும்கூட, ஆளுங்கட்சி எங்கெங்கு தவறு செய்ததோ, அதையெல்லாம் தயங்காமல் தட்டிக்கேட்டோம்தானே!"

"ஆட்சியில் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைதானே கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குள் பெரும் மனக் கசப்பை ஏற்படுத்தியது?"

"2001-லிருந்தே தி.மு.க-வுடன்தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்துவந்தது. நாங்கள் நினைத்திருந்தால், 2006-ல் மைனாரிட்டி அரசாக தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபோதே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டிருக்க முடியும். ஆனாலும்கூட கட்சியின் அகில இந்திய தலைமையின் கட்டளைக்குப் பணிந்து நாங்கள் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை. இப்படியேதான், 20 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கூட்டணி தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், தேர்தலில் மட்டும் கூட்டணி வைப்பதும், ஆட்சிக்கு வந்தபிறகு நமது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காததுமான நிலை தொடர்ந்து வந்ததையடுத்து, காங்கிரஸ் தொண்டர்களே ஆங்காங்கே 'ஆட்சியில் பங்கு' கோரிக்கையை எங்களிடம் முன்வைத்து வந்தனர்.

அமைச்சராகும் ராஜேஷ்குமார்
அமைச்சராகும் ராஜேஷ்குமார்

'தேர்தலில் அதிக எண்ணிக்கையில் சீட் பெறுவதோடு, ஆட்சியிலும் பங்கு பெற்றால் மட்டுமே மக்களின் கோரிக்கைகளை நம்மாலும் நிறைவேற்றித் தரமுடியும். மக்களோடு நாம் நெருங்கிச் செல்ல முடியும்' என்று காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் விருப்பப்பட்டனர்.

இதையடுத்தே, 'ஆட்சி அதிகாரத்திலும் நாம் பங்கு பெறவேண்டும்' என்ற எங்கள் கோரிக்கையை, எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமையிடம் கேட்டோம். ஆனாலும் அகில இந்திய தலைமை மாற்று முடிவை எடுத்தபிறகு, அந்தக் கட்டளைக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றினோம். முடிவில் தோல்வியே கிடைத்தது!"

"தற்போது காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் த.வெ.க கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா?"

"வரக்கூடிய உள்ளாட்சி மன்றத் தேர்தலில், த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறோம். எனவே கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கட்சியில் ஆங்காங்கே துடிப்புமிக்கத் தலைவர்களை உருவாக்குவதற்கான பணிகளையும் தற்போது செய்துவருகிறோம். இதெல்லாம் கடந்தகாலத்தில் கிடையாது. புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகு வந்த மாற்றங்கள்!"

"நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் வருடங்கள் கடந்துவிட்ட சூழலிலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லையே... இந்த நிலையில், த.வெ.க ஆட்சியிலாவது விசாரணையில் முன்னேற்றம் கிடைக்குமா?"

"வழக்கை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்துவிட்டார்கள். விசாரணையும் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க அரசாங்கம் இந்த வழக்கில் விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நானும் கோரிக்கை வைக்கிறேன்."

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

"அண்மையில், காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது நெல்லை மாவட்ட காங். தலைவர்கள் பொதுவெளியிலேயே மோதிக்கொண்டார்களே... காங்கிரஸின் கோஷ்டி மோதல் பிரச்னை எப்போதுதான் முடிவுக்கு வரும்?"

"காங்கிரஸ் கட்சி, 140 ஆண்டுகளைக் கடந்த மிகப்பெரிய பாரம்பர்யம் கொண்ட பேரியக்கம். கோடிக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட இந்த கட்சியில், அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படுவது போன்ற சின்னச்சின்ன சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஒருவகையில் இது கட்சியின் ஜனநாயகத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆனாலும்கூட இந்த விஷயத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சியாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை உறுதியாக கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் செய்துவருகிறோம்.

எது எப்படியிருந்தாலும், கட்சி என்று வரும்போது எங்களது வேற்றுமைகளை மறந்து, கட்சியின் முகமாக இருந்துவரும் ராகுல்காந்தி தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்போம்."

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்ட... மேலும் பார்க்க

'இனி சீர்திருத்தங்களை நோக்கி..!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு சோனம் வாங்சுக் பதிவு

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' - CJP Reactions

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடித... மேலும் பார்க்க

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.தர்மேந்திர பிரதான்இது குறித்து அவர... மேலும் பார்க்க

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக ப... மேலும் பார்க்க

விழுப்புரம்: சுட்டிக்காட்டிய விகடன்… சுத்தம் செய்யப்பட்ட திண்டிவனம் மேம்பாலம்! - ஆட்சியர் ஆக்‌ஷன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க