நடுக்கம், அவமான ரேகை, அன்பு..! - கைகள்ல இவ்ளோ விஷயம் இருக்கா? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்
'அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் ' என்பார்கள். என்னைப் பொருத்தவரை, நம் கைகளைக் கொண்டே அகத்தினைக் காண முடியும்.
தீவிர மன அழுத்தத்தில் இருப்பவனுடைய கைகளைப் பார்த்திருக்கிறீர்களா? 'Hesitation Cuts' எனப்படும் கீறல்கள், மணிக்கட்டில் முளைத்திருக்கும். அவை, தனக்குத் தானே அவன் துன்புறுத்திக் கொண்டதன் அடையாளமே. தன்னுடைய மன அழுத்தத்தை எப்படி வெளியேற்றுவது எனத் தெரியாமல், அவன் தேர்ந்தெடுத்த புத்திசாலித்தனமற்ற வழிமுறை அது.
ஒருவரை நாம் சந்திக்கும்போது, கை கூப்பியோ கைகுலுக்கியா வரவேற்கிறோம். அது ஒரு மரியாதை. ஆனால், அவ்வேளையிலும் தப்பித்தவறிக் கூட தன்னுடைய கைகள் வெளியே தெரியக்கூடாது என ஒருவனால் நினைக்கமுடியுமா? முடியுமென்றால், அவன் போதை ஊசிக்கு அடிமையானவனாக இருக்கலாம். ஊசி செலுத்தி செலுத்தி, தழும்பேறிப்போன அவனுடைய கைகள், வெளியே எட்டிப் பார்க்க கூச்சப்படும்.
பதற்றத்துடன் இருப்பவனின் கைகள், ஈரத்தில் குளித்தபடி நடனமாடும். குழப்பத்தில் இருப்பவனின் கைகள், முன்னும் பின்னும் ஊஞ்சலாடும். தூக்கமில்லாதவனின் கைகள், துவண்டு போயிருக்கும்.
Obsessive Compulsive Disorder (OCD) எனும் எண்ணச் சுழற்சி சார்ந்த மனநோய் ஒன்று உள்ளது. இந்நோயால் பாதிக்கப்படுபவர் சிலர், அடிக்கடி தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்வர்.
கைகளைத் தானே சுத்தம் செய்கிறார்கள். இதில் என்னப் பிரச்சினை என்கிறீர்களா? நீங்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை முறை கைகளை சுத்தம் செய்வீர்கள்?
பத்து? இருபது?
ஆனால், OCD ஆல் பாதிக்கப்படுபவர், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஐம்பதிலிருந்து நூறு முறை கூட, தங்களது கைகளை சுத்தம் செய்து கொள்வர். கைகளால் தொடும் எந்தப் பொருள்களாக இருந்தாலும், 'இது கிருமிகளின் குடியிருப்பு' என பயந்துபோய், 'தொட்டதற்கெல்லாம் சுத்தம்' பார்ப்பவர்கள் இவர்கள். இவர்களுடைய தோலுரிந்த, வெளிறிப்போயிருக்கும் கைகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன்.
குடிக்கு அடிமையாகி, என் முன் அமர்ந்திருப்பவனின் அவமான ரேகையை, நடுங்கும் அவன் கைகளில் தான் பார்க்கமுடியும். யாகசம் கேட்டு நடுங்கும் கைகளுக்கு இணையான கைகள் அவை. அப்போது அவன் கைகள் மட்டும் நடுங்குவதில்லை. அவனையே நம்பி, அவனருகில் அமர்ந்திருக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் தான் நடுங்குகிறது. குடிகாரனின் கைகள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. அவை ஓரிடத்தில் நிலைப்பது இல்லை. ஒன்று நடுங்குகிறது அல்லது ஓங்குகிறது.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'இடக்கை' என்றொரு நாவலை எழுதியிருக்கிறார்.
நம் உடலில் இரண்டு கைகள் இருந்தாலும், அவற்றை ஒரே போல நாம் பார்ப்பதில்லை அல்லவா? வலக்கைக்கு கிடைக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் இடக்கைக்கு கிடைப்பதில்லை.
இடக்கை கொண்டு ஒரு பொருளைக் கொடுத்தால், அது அவமரியாதையாகவே பார்க்கப்படுகிறது.
இடக்கை என்றால் அவமானம். இடக்கை என்றால் அருவருப்பு.
அவ்வளவு ஏன்? இடக்கை பழக்கம் உள்ளவர்களை, தீண்டத்தகாதவர்கள் போலத் தானே இன்றும் பார்க்கிறோம்.
கைகளுக்கே இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கும்போது, மனிதர்களிடையே இருக்காதா என்ன? இதைத்தான் 'இடக்கை' நாவல் பேசுகிறது.
பணம் உள்ளவன் வலக்கை ஆகிறான். இல்லாதவன் இடக்கை ஆகிறான். உயர்சாதியில் பிறந்தவன் வலக்கை ஆகிறான். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் இடக்கை ஆகிறான். உடல் வலிமை மிகுந்தவன் வலக்கை ஆகிறான். எளியவன் இடக்கை ஆகிறான்.
இப்படி காலம் முழுக்க ஓர் இடக்கையாகவே வாழும் தூமகேது என்பவனின் கதை தான் 'இடக்கை' நாவல்.
'கைகள் தான் நம் வாழ்வின் அச்சாணி' என்பதை ஒரு குறியீடாகவே இப்புனைவில் முன்வைத்திருப்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'குழந்தைகள் மூளை அறுவை சிகிச்சை' நிபுணரான பென் கார்சன் (Ben Carson), 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். 'Occipital Craniophagus' எனப்படும், பின்தலைகள் ஒட்டிப்பிறந்த குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை தான் அது.
அதற்கு முன்பு வரையில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சையை மேற்கொண்டால், இரண்டில் ஏதாவது ஒரு குழந்தை இறந்துவிடும். ஆனால், பென் கார்சன் முதல் முறையாக இரண்டு குழந்தைகளையும் உயிருடன் தனித்தனியாகப் பிரித்தெடுத்தார் என்பதே அந்த அறுவை சிகிச்சையின் சிறப்பாகும்.
இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு, 'The Gifted Hands (2009)' எனும் ஹாலிவுட் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஒரு அறுவை சிகிச்சை மருத்துவரின் கைகள் புனிதமானது. உயிரைக் காப்பாற்ற கத்தியைக் கையில் எடுப்பவர்கள், அவர்கள் மட்டுமே!
'சாத்தியமே இல்லாதது...' என நம்பப்பட்ட ஒன்றை சாத்தியமாக்கியது பென் கார்சனின் கைகள்.
நாம் எல்லோருக்கும் பிடித்த, எப்போதும் நேசிக்கின்ற கைகள் சில இருக்கின்றன. அதில் முதன்மையானவை அம்மாவுடைய கைகள். பள்ளிக்குச் செல்லும் போது, அம்மாவின் கைகளைத் தானே இறுக்கமாக பற்றிக் கொண்டோம்? தலை கோதி விடும் அம்மாவின் கைகள் தான், கவலைகளை மறக்கச் செய்கின்றன. கண்டிப்பு மிக்க அம்மாவின் கைகள் தான், சரியான பாதையில் வழி நடத்துகின்றன. அம்மாவின் கைகளால் சாப்பிடும் உணவுக்கு நிகர் ஏது? அம்மாவை வணங்காத கைகளுக்கு உயர்வேது?
அப்பாவின் கைகள் உழைப்பைக் காட்டும். மனைவியின் கைகள் அன்பைக் காட்டும். ஆசிரியரின் கைகள் அறிவைக் காட்டும். நண்பனின் கைகள் நம்பிக்கையைக் காட்டும்.
இவர்களுடைய கைகளுக்கு இணையாக நான் பார்க்கும், மற்றுமொரு கைகள் இருக்கின்றன. அது, 'இளையராஜாவின் கைகள்'. அந்தக் கைகள் தான் எத்தனை எத்தனை அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன!
அந்தக் கைகளால் தானே காதலின் தீபம் ஒன்றை ஏற்ற முடிந்தது. அந்தக் கைகளால் தானே என் இனிய பொன் நிலாவைக் கொண்டு வர முடிந்தது. இராஜராஜ சோழனாக மாறி, எத்தனை முறை இங்கும் அங்கும் ஊஞ்சலாக உலாவினேன் என்பதை நானே மறந்து விட்டேன்.
'அவன் கை பட்டால் தீட்டு' என முழக்கமிட்ட கைகளை ஒடுக்கிய பெரியாரின் கைகள், 'சாக்கடை அள்ளும் கைகளுக்கு படிப்பு எதற்கு?' எனத் துடித்தக் கைகளை முறித்த காமராசரின் கைகள், 'இந்தக் கை இதையெல்லாம் எழுதக்கூடாது' என தடுத்த கைகளை அடக்கிய அம்பேத்கரின் கைகள் என 'மாயம் செய்த கைகள்' பட்டியல் நீளமானது.
இது ஒருபுறம் இருக்க, நாம் ஒதுக்கி வைக்க வேண்டிய சில கைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
புதுமைப்பித்தன், 'கொலைகாரன் கை' என்கிற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் வரும் பரமேஸ்வரன், தனக்கு மாயாஜாலம் நடக்கும் என நினைத்து வெட்டப்பட்ட ஒரு பிணத்தின் கையை தன்னுடைய அறையில் தொங்க விடுகிறான். ஆனால் அக்கை, பிறந்தது முதலே வன்முறையில் ஈடுபட்டக் கை என்பது அவனுக்குத் தெரியாது. ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு இப்படியொரு காரியத்தைச் செய்வான் அவன். இறுதியில் பரமேஸ்வரனையே அந்தக்கை காவு வாங்குகிறது.
பரமேஸ்வரனைப் போலவே நாமும், மாயாஜாலம் செய்யும் கைகளை எதிர்ப்பார்த்தே நேரத்தை வீணாக்குகிறோம். உண்மையில் மாயாஜாலம் நிகழ்த்தும் கைகள், வெளியே இருந்து வருவதில்லை. நம்முடன் தான் இருக்கின்றன.
ஒருமுறை என்னிடம் சிகிச்சைக்காக வந்தப் பெரியவர் ஒருவர்,'என்ன ஒரு முற தொடுங்க சார் என்றார்'. 'ஏன்?' என்றேன் நான். 'சில டாக்டருங்க கை பட்டாலே நோய் போயிடும். அதான்' என்றார். 'இதுலலாம் எனக்கு நம்பிக்க இல்லீங்க' என்றேன். 'பரவால்ல சார். தொடுங்களேன்' என்றார் பெரியவர். தொட்டேன். நம்பிக்கையையுடன் ஆத்ம திருப்தியோடு வெளியே எழுந்து சென்றார்.
மருந்துகள் மட்டுமே ஒருவருடைய நோயை குணமாக்குவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
அவர் சென்ற பிறகும் நீண்ட நேரம் என்னுடைய கைகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
- சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.