ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தா...
மோகன்லாலின் தாயார் மறைவு: "நாங்கள் பேசுவோம், சிரிப்போம்!" - நினைவுகளைப் பகிரும் மோகன்லாலின் நண்பர்
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.
மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோகன்லாலுக்கு நெருக்கமானவரும், இயக்குநருமான மேஜர் ரவி, மோகன்லாலின் தாயார் சாந்தா குறித்து மனோரமா ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.

அவர், "லாலின் அம்மா இறந்த செய்தியைக் கேட்டதும் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அழுதுகொண்டே மோகன்லாலைப் பார்க்கப் போனேன். அவரும் உடைந்து போயிருந்தார். அவரது கண்களில் ஆழமான துக்கம் தெரிந்தது.
ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லோரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் உள்ளே மறைத்து வைத்திருக்கும் வலியை என்னால் பார்க்க முடிந்தது. நான் எப்போது போன் செய்தாலும் மோகன்லால் ‘அண்ணா, அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்’ என வருத்தத்துடன் சொல்வார்.
அதைக் கேட்கும்போதே அவருக்குள் ஏற்பட்ட வலி எனக்குப் புரியும். அம்மா போய்விட்டால் உண்மையிலேயே ஒருவன் தனிமையாகிவிடுகிறான் என்ற பயம் அவருக்குள் இருந்தது.
எத்தனை பேர் சுற்றிலும் இருந்தாலும், வேறு யாராலும் நிரப்ப முடியாத பாதுகாப்பின்மை உணர்வு தாயை இழந்த சமயத்தில் வரும். லால் இந்த வலியை வெளிக்காட்டவில்லை.

1994-ல் லாலை முதலில் சந்தித்தபோது அவர் என்னை முடவன்முகளில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவரது பெற்றோர் இருவரிடமும் நான் ஒரு ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தினார்.
அன்றிலிருந்து எங்கள் உறவு சினிமாவைத் தாண்டியதாக உருவெடுத்தது. லாலுக்கும் அவரது அம்மாவுக்கும் இடையிலான பாசத்தைப் பார்க்கும்போது, என் அம்மா உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். நான் சாந்தாகுமாரியை அடிக்கடி போய்ப் பார்ப்பேன்.
சில சமயம் அவர் என்னைப் பார்த்து ‘எங்க போயிருந்த?’ என்று கேட்பது போலப் பார்ப்பார். பிறகு நாங்கள் பேசுவோம், தமாஷ் செய்வோம், சிரிப்போம்! நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை மிகுந்த அன்போடு வரவேற்றார்” எனக் கூறியிருக்கிறார்.



















