`4 தொகுதிகள்; 3-ல் உதயசூரியன் சின்னம்' - மதிமுக-வை சரிகட்டிய திமுக!
கும்பமேளா வைரல் பெண் மோனலிசா.! கேரளாவில் காதல் திருமணம்! பின்னணி என்ன?
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது வசீகர புன்னகையாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறார். மோனலிசா போஸ்லேயும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகம்மது ஃபர்மானும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்துள்ளது. அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மோனலிசாவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சினிமா படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் வந்திருந்த மோனலிசா, குடும்பத்தினர் தங்கள் காதலை எதிர்ப்பதாக சொல்லி தனது காதலனுடன் தம்பானூர் காவல் நிலையத்தில் இன்று தஞ்சம் புகுந்தார். தந்தை தன்னை வேறு ஒருவரை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக மோனாலிசா தம்பானூர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். மோனலிசா அளித்த புகாரின் அடிப்படையில், தம்பனூர் போலீசார் அவரது தந்தை ஜெய்சிங் போஸ்லே மற்றும் படக்குழுவினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், காதலர்களுக்கு சட்ட உதவி வழங்குவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மோனலிசாவும் காதலர் முஹம்மது ஃபர்மானும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் இன்று மாலை திருமணம் நடந்திருக்கிறது. கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி, சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் மற்றும் சி.பி.எம் மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து சி.பி.எம் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், "அவர்கள் இருவரும் சுயமாக முடிவெடுத்து ஒன்றிணைகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மானும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனாலிசாவும் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம் கேரளா என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட கோயில் என்பதால் திருமணத்திற்கு இந்தக் கோயிலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும் என்று ஸ்ரீநாராயணகுரு கூறியிருக்கிறார். வெவ்வேறு மதங்களாக இருந்தாலும், எல்லா மதங்களின் சாராம்சமாக இருப்பது மனிதநேயம் ஆகும். அந்த மனிதநேயத்தின் அடிப்படையில் முன்னேறும்படி மகா குரு ஸ்ரீ நாராயண குரு கூறியுள்ளார்" என்றார்.
















