“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” - ரிப்போர்ட் ரெடி!
"நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்; தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும்!" - வன்னி அரசு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் தவெகவிற்கு ஆதரவைத் வழங்குவதாக நேற்று அறிவித்தனர். இருப்பினும், தவெக-விற்கு இன்னும் பெரும்பான்மை பெறவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு குறித்து அறிவித்தால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும். அதனால், விசிக அறிவிக்கப்போகும் முடிவிற்குத் தமிழக அரசியலே பரபரப்புடன் காத்திருக்கிறது.

அது தொடர்பாக, இன்று செய்தியாளர்களைத் திருமா சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில், நேற்றைய தினம் விசிகவின் வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இது பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் வன்னி அரசு.
அதில் அவர், "தலைவர் இன்று முடிவை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். தலைவருடைய முடிவிற்காக நானும் காத்திருக்கிறேன். தலைவர் சொல்வதுதான் எங்களுடைய நிலைப்பாடும். உங்களைப் போன்று நானும் அதற்காகக் காத்திருக்கிறேன்.
மக்கள் அதற்கான தருணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் மக்களின் எண்ணத்தை நாங்களும் பிரதிபலிக்கிறோம். தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் எப்போதுமே நிற்கும்.
ஏற்கனவே நேற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நல்ல முடிவெடுத்திருக்கிறார்கள்.

இன்று அதைத் தலைவர் அறிவிப்பார். அந்த அறிவிப்புக்காக உங்களைப் போன்று நானும் வந்து காத்திருக்கிறேன். எனக்குத் தனிப்பட்ட கருத்து என்று ஒன்றும் இல்லை.
கட்சியினுடைய கருத்து, தலைவருடைய கருத்துதான் எங்களுடைய கருத்து. அதனால் கட்டாயம் இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தனிப்பட்ட முறையில் யாரையும் விடுதலைச் சிறுத்தைகள் காழ்புணர்ச்சியோடு விமர்சிக்கவில்லை. அரசியல் ரீதியான விமர்சனம்தான். அரசியல் ரீதியான விமர்சனம் பொதுவானதுதான்" எனக் கூறியிருக்கிறார்.

















