செய்திகள் :

பக்ரீத்: `வாங்குபவர் இல்லை... விற்கவும் வழியில்லை' - சிக்கலில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம்!?

post image

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இறைத்தூதராகக் கருதப்படும் இப்ராஹிம் (ஆபிரஹாம்) நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ஆடு, மாடு, ஒட்டகம் என அவரவரின் வசதிக்கேற்றவாறு பிராணிகளைப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கி, பக்ரீத் பண்டிகை காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பக்ரீத் இறைச்சிக்காக மாடுகளை வாங்குவதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.

கோப்புப்படம்
பக்ரீத் பண்டிகை ஆடு விற்பனை

முஸ்லிம் சமூகத்தினரின் இந்தத் திடீர் புறக்கணிப்பு முடிவுக்குப் பின்னணியில் கடந்த வாரம் நடந்த சில சம்பவங்கள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக சட்டப்பூர்வமாக மாடுகளை ஏற்றிச் சென்ற 11 வாகனங்களை உள்ளூர் அதிகாரிகளும், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழிமறித்துப் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் அனைத்தும் பசு பாதுகாப்பு இல்லங்களுக்கு (கோசாலைகளுக்கு) அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிரட்டல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டன.

அதில், கால்நடைகளைக் கையாளுபவர்கள் அல்லது வாங்குபவர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்ற நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து உள்ளூர் முஸ்லிம் அமைப்புகளின் வழக்கறிஞர் அன்ஷாத்-இ-பால்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்த மிரட்டல் பதாகைகள் குறித்து காவல்துறை மற்றும் நகராட்சியிடம் கேட்டபோது, அவர்கள் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று மறுத்துவிட்டனர். சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளனர். சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்பவர்கள் கூடத் தொடர்ந்து தாக்கப்படுவதாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்குப் பசு மற்றும் எருமைகளை வாங்குவதில்லை என்று ஒட்டுமொத்த சமூகமும் ஒருமனதாக முடிவு செய்துள்ளது," என்று தெரிவித்தார்.

கர்நாடக முஸ்லிம் அமைப்புகள்
கர்நாடக முஸ்லிம் அமைப்புகள்

இதுகுறித்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுபான்விதா, ``அரசின் எந்தவொரு அமைப்பும் இந்த பதாகைகளை வைக்கவில்லை. வீடுகளை இடிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இதுதொடர்பாகப் புகார் ஏதும் வராதபோதிலும், இந்த பதாகைகளை அச்சிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளூர் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார்.

பொதுவாக, ஹாசன் மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை நடைபெறும் வாராந்திர கால்நடை சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய வாரங்களில் இந்தச் சந்தையில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் பால் உற்பத்தித் திறனை இழந்த மாடுகளை விற்கவும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அடுத்தகட்ட விவசாயப் பணிகளைத் தொடங்கவும் இச்சந்தையை மட்டுமே நம்பியுள்ளனர்.

விவசாயி
விவசாயி

ஆனால், இஸ்லாமிய அமைப்புகளின் புறக்கணிப்பு காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை சந்தைக்கு மாடுகளை ஓட்டி வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் வாங்குபவர்கள் யாரும் இன்றி ஏமாற்றமடைந்தனர். அதனால் வாராந்திர கால்நடை சந்தைகளில் பதற்றமும், மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளின் இந்த முடிவால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்திருக்கின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன், ``நாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்த்து வருகிறோம். அடுத்த போக விவசாயத்திற்கு விதை மற்றும் உரங்கள் வாங்க எனக்கு இப்போது உடனடியாக 40,000 ரூபாய் தேவைப்படுகிறது. இந்தத் தொகையை அரசாங்கம் தருகிறதா அல்லது இஸ்லாமிய சமூகத்தினர் தருகிறார்களா என்பது எனக்கு முக்கியமல்ல. எனது வாழ்வாதாரத்திற்குப் பணம் தேவை. எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுத்தால், மாடுகளை ஓட்டிக்கொண்டு நேராகத் துணை ஆணையர் அலுவலக வாசலில் போய் நிற்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று அவர் எச்சரித்தார்.

மேற்கு வங்க மாட்டுச் சந்தை
மேற்கு வங்க மாட்டுச் சந்தை

கர்நாடகாவில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 'பசு வதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டம்' இந்தச் சிக்கலை மேலும் தீவிரமாக்கியுள்ளது என்று இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இச்சட்டத்தின்படி பசுக்கள், கன்றுகள், எருதுகள் மற்றும் காளைகளை எந்த வயதிலும் இறைச்சிக்காக வெட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், 13 வயதுக்கு மேற்பட்ட எருமைகளை, அவை விவசாயத்திற்கோ அல்லது பால் உற்பத்திக்கோ தகுதியற்றவை என்று தகுதியான அதிகாரியால் சான்றளிக்கப்பட்டால் மட்டுமே இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி உண்டு.

பொதுவாக எருமைகள் 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பதால், உற்பத்தித் திறனை இழந்த கடைசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றை வளர்ப்பது விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறுகிறது. இந்தச் சூழ்நிலையில், பண்டிகை கால வர்த்தகமும் முடங்கியுள்ளது விவசாயிகளை மேலும் கடனாளியாக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

அதேப்போல ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தையாகக் கருதப்படும் மும்பையின் தியோனார் (Deonar) சந்தையிலும் இந்த ஆண்டு பக்ரீத் வியாபாரம் மந்தமடைந்துள்ளது. வழக்கமாகப் பண்டிகை காலத்தில் 1.80 லட்சம் ஆடுகள் விற்பனைக்கு வரும் நிலையில், இந்த ஆண்டு செவ்வாய் மாலை வரை 1.56 லட்சம் ஆடுகள் மட்டுமே வந்துள்ளன.

கால்நடை
கால்நடை

இதற்குக் காரணம், 'விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்' கீழ் மகாராஷ்டிரா முழுவதும் ஆடுகளை ஏற்றி வந்த 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் ஆங்காங்கே சிறைபிடிக்கப்பட்டதே ஆகும். மேலும், எரிபொருள் விலை உயர்வால் லாரி வாடகை 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதனால் சந்தைக்கு ஆடுகளின் வரவு குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு ஆட்டின் ஆரம்ப விலை 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் நிலவும் சமூக-அரசியல் பதற்றமும், மும்பையில் நிலவும் பொருளாதார மற்றும் சட்டக் கெடுபிடிகளும் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை காலக் கால்நடை வர்த்தகத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க