`கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?' - எழுந்த புகைச்சலும் காங்கிர...
"வலது கை செய்கின்ற உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது" - சமூக சேவையில் 'தூய யோவான்' மாணவர் படை!
திருநெல்வேலியில் இயங்கி வரும் 'தூய யோவான் நிறுவனம்' மக்களுக்குத் தேவையான சமூக சேவைகளைச் சமூகப்பொறுப்போடு வழங்கி வருகிறது.
இதனை மனநேயத்தன்மையோடு முன்னெடுத்து வருபவர்கள் கல்லூரி படிக்கக் கூடிய மாணவர் படையினர். இதுகுறித்து அதன் நிறுவனரான முதுகலை வணிகவியல் துறை மாணவர் பா. வினோத் என்பவரிடம் உரையாடத் தொடங்கினோம்,

"தூய யோவான் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னால் தொடங்கப்பட்டது. ஒருமுறை ஒருவருக்கு உதவி செய்தபோது மனதார ஏற்பட்ட திருப்தியே இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கான முதற்காரணம்.
கல்லூரி மாணவர்களாக இணைந்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நமது குழுவில் மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும், நட்புறவுடனும் சமூக சேவைகளைச் செய்து வருகின்றோம்.
மேலும், சில செயல்பாடுகளைச் சிறப்பாகவும், திறம்படவும் நடத்துவதற்காக மகளிர் அணியில் 12 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர்க்குத் தேவையான தனிப்பட்ட உதவிகளைச் செய்வதற்கே மகளிர் அணியைத் தனியே உருவாக்கியுள்ளோம்.
நமது குழு, ஒரு குடும்பமாக இணைந்து சமூக சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தூய யோவான் நிறுவனம் – மனிதநேய சேவையின் புதிய அடையாளம்
மனிதநேயமும், சமூகப் பொறுப்பும் இணைந்த எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பாக “தூய யோவான் நிறுவனம்” இன்று பல்வேறு சமூக சேவைகளின் மூலம் மக்களின் மனதில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது.
தற்போது இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து சமூக சேவைகளைச் செய்து வரும் எங்கள் நிறுவனம், ஏராளமான மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
எங்கள் முக்கிய சேவைகள்:
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் சாலையோரங்களில் வசிப்போருக்கு உணவு வழங்குதல்,
- மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல்,

- பள்ளிகளில் இலவச GST வகுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்,
- தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுடன் கலந்துரையாடி ஆதரவு அளித்தல்.
உங்கள் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதா?
தற்போது எங்கள் நிறுவனம் முழுமையான அங்கீகாரம் பெறாத நிலையிலிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆதரவுக்காக மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இயங்கி வரும் 'அவிசா நல அறக்கட்டளை'யின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அவர்கள் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். இளங்கலைப் பட்டப்படிப்பு காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து பயிலும் எங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எங்கள் கல்வி நிறைவடைந்த பின், நிறுவனம் முழுமையான அங்கீகாரம் பெறும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.
கல்லூரி நண்பர்களாக இணைந்து செயல்படுவதால் எங்களுடைய கல்லூரியின் பெயரைத் தூய யோவான் நிறுவனமாக நாங்கள் பெயர் சூட்டிக் கொண்டோம் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'வலது கை உதவி செய்வது இடது கைக்கும் தெரியக்கூடாது....!'
நாங்கள் செய்த பல சேவைகளுக்கான புகைப்படங்கள் அனைத்தும் எங்களிடம் இல்லை. 'வலது கை செய்கின்ற உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது' என்ற எண்ணத்தோடு அமைதியாகச் சேவைகளைச் செய்து வருகிறோம்.
சில நிறுவனங்கள் மற்றும் நலதாரர்கள் வழங்கும் உதவிகளைச் சரியான முறையில் பயன்படுத்துகிறோம் என்பதை ஆவணப்படுத்துவதற்காக மட்டுமே சில நேரங்களில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
அவை தேவையான சமயங்களில் இணையதளங்களிலும் பதிவேற்றப்படுகின்றன. மற்றபடி நாங்கள் உதவி செய்வதை அதிகமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை.

தூய யோவான் நிறுவனத்தில் சமூக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். இதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் அல்லது கட்டுப்பாடுகளும் இல்லை. எங்களிடம் தனியாக ஒரு பெரிய குழு அமைப்பு இல்லை.
ஒரே வகுப்பில் இணைந்து படிக்கும் மாணவர்களும், நண்பர்களும் இணைந்து சமூக சேவையை மேற்கொண்டு வருகின்றோம். சமூகத்திற்கு நல்லது செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றலாம். சமூக சேவைக்காக நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட விரும்பும் மாணவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்" என்ற உற்சாகமாக விடை கொடுத்தார்.



















