ஈரோடு: மேயர் அறையில் முதல்வர் விஜய் படம் வைக்க எதிர்ப்பு; மாநகராட்சியில் சலசலப்ப...
`மாப்பிளைக்கு சுகர் இருக்கு'- தரகு பணம் தராத ஆத்திரம்; மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய நபர்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை திருமண ஏற்பாட்டாளர் ஒருவர் பேசி முடித்துள்ளாராம். இந்த நிலையில், பெண் வீட்டில் அந்த நபருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை பேசியபடிக் கொடுத்துள்ளனர். ஆனால், மணமகன் வீட்டில் பேசிய பணத்தை தராமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த திருமண ஏற்பாட்டாளரான நபர், தரகுப் பணத்தை மணமகன் வீட்டில் கேட்டுள்ளார்.

அவர்கள் தர முடியாது என்று கூறியுள்ளனராம். இதனால் ஆத்திரமடைந்தவர், நேராக திருமணம் நடக்கும் சாத்தான்குளத்தில் உள்ள மண்டபத்திற்குச் சென்று, மணமகனுக்கு காலில் ஏற்கெனவே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தை போட்டோவில் காண்பித்து, ``மணமகனுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதனால்தான் காலில் காயம் ஆறாமல் உள்ளது. தெரியாமல் நான் உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், உடனடியாக மணமகன் வீட்டிற்கு போன் செய்துள்ளனர். அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அவர்கள், ``இது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான்" என்று கூறியுள்ளனர். ஆனால், அதைக் கேட்காத மணமகள் வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனும் மணமகன் வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி இந்த திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணமகன் வீட்டார், உறவினர்களிடம் விசாரித்து பார்த்தபோது திருமண ஏற்பாட்டாளர், தனக்கு வர வேண்டிய தரகுப் பணத்தைத் தராத ஆத்திரத்தில் இப்படிச் செய்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

















