கொரோனாவுக்கே tough கொடுக்கும் எபோலா... பீதியில் உலக நாடுகள்! இன்னொரு ரவுண்டை இந்...
யார் அடுத்த சட்ட ஒழுங்கு டி.ஜி.பி?- 3 பேர் பட்டியல் ரெடி; முதல்வர் விஜய்-ன் கிரீன் சிக்னல் யாருக்கு?
தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (Union Public Service Commission) தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பட்டியலில் தங்களுக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவரை இந்தப் பதவியில் நியமிக்கும். இந்த நடைமுறையின்படி கடந்த தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அவரின் ஓய்வுக்குப் பிறகு புதிய டி.ஜி.பி-யை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நிரந்தர டி.ஜி.பி-யை தேர்வு செய்வதில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் லாபி செய்ததால் வெங்கட்ராமன் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பியாக இருந்து வந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்தச் சூழலில்தான் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி-யாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு சந்தீப்ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க, புதிய ஆட்சியை அமைத்தது. இருப்பினும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக சந்தீப்ராய் ரத்தோர், அந்தப் பதவியிலிருந்து வருகிறார். அவர் தலைமையில் முதல்வர் விஜய்க்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியை தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி கூட்டம் டெல்லியில் இன்று (26.5.2026) நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போதைய சீனியரிட்டி அடிப்படையில் சீனியர் டி.ஜி.பி-க்கள் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று பேரில் ஒருவரை டி.ஜி.பியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் பட்டியலை யு.பி.எஸ்.சி. தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அதில், தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பியாக நியமிக்க உள்ளது.
இதுகுறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``தற்போதைய நிலவரப்படி சீனியாரிட்டி பட்டியலில் ராஜீவ்குமார் முதல் இடத்திலும் சந்தீப்ராய் ரத்தோர், இரண்டாவது இடத்திலும் வன்னியபெருமாள் மூன்றாவது இடத்திலும், மகேஷ்குமார் நான்காவது இடத்திலும் வெங்கட்ராமன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். மூன்று பேர் கொண்ட பட்டியல் என்பதால் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரின் பெயர்கள்தான் இடம் பெற்றியிருக்க வேண்டும். இதில் வன்னியபெருமாளுக்கு நன்னடத்தை சான்றிதழை தமிழக அரசு கொடுக்கவில்லை. அதனால் மூன்றாவது இடத்திலிருந்த அவரின் பெயர் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வாலின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று சீனியர் டி.ஜி.பி-க்களில் சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்கக் கூடாது என்று சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் லாபி செய்து வருகிறார்கள்.

அடுத்துள்ள ராஜீவ்குமார், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவர், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இதில் மகேஷ்குமார் அகர்வால், டி.ஜி.பி-க்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது அவர் மாற்றுப்பணியாக டெல்லியில் பணியாற்றி வருகிறார். அவரை தமிழக அரசு புதிய டி.ஜி.பி-யாக நியமிக்கும் பட்சத்தில் மத்திய அரசு பணியிலிருக்கும் மகேஷ்குமார் அகர்வால் சென்னை திரும்புவார். இவர், ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியிருக்கிறார். மேலும் டெல்லியிலும் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்து வருகிறது. யு.பி.எஸ்.சி அனுப்பும் மூன்று சீனியர் டி.ஜி.பி-க்களில் யாரை முதல்வர் விஜய், டிக் அடிக்கிறார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்" என்கிறார்கள்.


















