Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன...
சொகுசு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் சாதனை; ஐ.நா விருது வென்ற மேஜர் அபிலாஷா பராக்!
தேச எல்லையைத் தாண்டி, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார் மேஜர் அபிலாஷா பராக் (Major Abhilasha Barak). லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் (UNIFIL) ஒரு பகுதியாகச் சேவையாற்றி வரும் இவருக்கு, உலகளாவிய மிக உயரிய கௌரவமான `2025-ம் ஆண்டிற்கான ஐ.நா ராணுவ பாலின வழக்கறிஞர் விருது’ (2025 UN Military Gender Advocate of the Year Award) வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் பிறந்தார். அப்போது இவரது தந்தை, பாதுகாப்புப் படை அதிகாரிகள் கல்லூரியில் (DSSC) உயர்தர ராணுவப் பயிற்சியில் இருந்தார். பின்னர் இவர்களது குடும்பம் ஹரியானாவின் பஞ்ச்குலாவில் குடியேறியது.
அபிலாஷாவின் தந்தை கர்னல் (ஓய்வு) எஸ்.ஓம் சிங். அவரது மூத்த சகோதரரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். சிறு வயது முதலே வீட்டிலிருந்த தேசபக்தியும், கட்டுக்கோப்பான ஒழுக்கமும் அபிலாஷாவை அறியாமலேயே ராணுவச் சீருடையின் மீது ஒரு தீராக் காதலை ஏற்படுத்தியது.
அபிலாஷா தனது ஆரம்பப் பள்ளிக் கல்வியை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற தி லாரன்ஸ் பள்ளி, சனாவரில் முடித்தார். அதன்பின், தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் காட்டிய அவர், டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (B.Tech - Electronics and Communication Engineering) படிப்பை 2016-ல் வெற்றிகரமாக முடித்தார்.
படிப்பு முடிந்ததும், அமெரிக்காவின் முன்னணி பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான டெலாய்ட்-ல் வேலை கிடைத்தது. கைநிறையச் சம்பளம், சொகுசான வாழ்க்கை என எல்லாம் இருந்தும், அபிலாஷாவின் உள்ளுக்குள் இருந்த தேசச் சேவைக்கான நெருப்பு அவரை சும்மா இருக்க விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு தாய்நாடு திரும்பினார்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முடிவோடு இந்தியா திரும்பிய அபிலாஷாவுக்கு, ஆரம்பமே சோதனையாக அமைந்தது. ஆனால், தோல்விகளைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை.
ராணுவத் தேர்வான மிகக் கடினமான SSB (Services Selection Board) நேர்காணலை தொடர்ந்து நான்கு முறை எதிர்கொண்டு, தனது அசாத்திய தன்னம்பிக்கையால் அதை முறியடித்தார்.
2018 செப்டம்பர்: சென்னை ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் (OTA) வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து, `ஆர்மி ஏர் டிஃபென்ஸ் கோர்ப்ஸ்' (Army Air Defence Corps) பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2019 செப்டம்பர்: அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து தனது படைப்பிரிவு `பிரசிடெண்ட்ஸ் கலர்ஸ்' விருதைப் பெற்றபோது, அந்தப் பெருமைமிகு ராணுவப் படைப்பிரிவை முன்னின்று வழிநடத்தும் கௌரவத்தைப் பெற்றார்.
2022 மே: இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு பொன்னெழுத்து நாள்! நாசிக்கில் உள்ள `காம்பாட் ஆர்மி ஏவியேஷன் டிரெய்னிங் ஸ்கூல்' மூலம் கடினமான வான்வழிப் பயிற்சிகளை முடித்து, இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் ஹெலிகாப்டர் பைலட் (First Woman Combat Aviator) என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்!

இந்திய எல்லைகளைப் பாதுகாத்த அபிலாஷாவின் திறமை, சர்வதேச அமைதிக்காக லெபனான் நாட்டிற்கு அவரை அழைத்துச் சென்றது. மேற்கு ஆசிய நாடான லெபனானில் நிலவும் பதற்றமான சூழலில், ஐ.நா இடைக்காலப் படையின் (UNIFIL) இந்தியப் பிரிவில் 'பெண் ஈடுபாட்டுக் குழுவின்' (Female Engagement Team - FET) கமாண்டராக அவர் பொறுப்பேற்றார்.
அங்கு அவர் செய்தது ராணுவக் காவல் பணிகள் மட்டுமல்ல, மக்களின் இதயங்களை வெல்லும் மனிதாபிமானப் பணிகளையும் செய்தார். போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பெண்கள் மற்றும் இளம் பெண்களை நேரில் சந்தித்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகப் பல விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாட்டு திட்டங்களை நடத்தினார். அமைதிப்படையில் உள்ள மற்ற ராணுவ வீரர்களுக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியப் பயிற்சிகளை வழங்கினார்.
லெபனானில் அவர் காட்டிய இந்த அசாத்திய அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை மே 2026-ல் அவரை "2025-ஆம் ஆண்டிற்கான ஐ.நா ராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு" தேர்வு செய்தது.
அமைதி காக்கும் பணிகளில் பாலினப் பார்வையை மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கும் வீரர்களுக்கு 2016 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே 29, 2026 அன்று, சர்வதேச ஐ.நா அமைதிப்படையினர் தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்தியப் பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக் ஆவார். இதற்கு முன் இந்த பெருமையைப் பெற்றவர்கள்:
மேஜர் சுமேன் கவானி (2019 - தெற்கு சூடான் பணி)
மேஜர் ராதிகா சென் (2023 - காங்கோ குடியரசு பணி)

இந்திய அமைதிப்படை லெபனானில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, லெபனானில் 48 நாடுகளைச் சேர்ந்த 7,538 அமைதிப்படை வீரர்கள் உள்ளனர். இதில் இத்தாலி, இந்தோனேசியா மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, 642 வீரர்களுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இத்தகைய சவாலான சூழலில் ஒரு இந்தியப் பெண் அதிகாரி முன்னின்று வழிநடத்தி உலக விருதை வென்றிருப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!
ராணுவத்தில் இணைய விரும்பும் இளம் பெண்களுக்கு மேஜர் அபிலாஷா பராக் கூறும் வார்த்தைகள் தூண்டுகோலாக இருக்கும், "உங்களுக்குத் தேவை அசாத்தியமான ஆர்வம் மட்டுமே. அர்ப்பணிப்புடன் வாய்ப்புகளைப் பிடித்துக் கொண்டு உழையுங்கள். இன்றைய தேதியில் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை!"



















