பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ....
பங்கு முதலீடு: ஒருவர் அதிகபட்சம் எத்தனை பங்குகள் வைத்திருப்பது லாபம் தரும்? | Guidelines
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் எல்லோருக்குமே இருக்கும் முக்கியமான குழப்பங்களில் ஒன்று... “எத்தனை நிறுவனங்களின் பங்குகளை நம்முடைய போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க வேண்டும்?” என்பதுதான்.
5, 10, 20 என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கைச் சொல்கிறார்கள். உண்மையில், பங்கு முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து, லாபம் பார்க்க எத்தனை பங்குகள் வாங்க வேண்டும்?
குறிப்பாகச் சொன்னால், இதற்கு பொதுவான எண் என்று ஒன்றைச் சொல்லிவிட முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், பங்குகளின் எண்ணிக்கையைவிட அவற்றின் தரம், வளர்ச்சிக்கான சாத்தியங்கள், முதலீட்டாளரின் அனுபவம், முதலீட்டுக் காலம் எனப் பல விஷயங்கள் முக்கியம்.
ஆனால், பங்கு முதலீட்டில் முதலீட்டாளர்கள் பின்பற்றக்கூடிய சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதன்படி பார்க்கும்போது ஒவ்வொரு தரப்பினருக்கு ஒவ்வொரு எண் போதுமானது என்று சொல்லலாம்.

5–10 பங்குகள்... ஆரம்பநிலைக்கு போதுமானது!
பங்குச் சந்தைக்குப் புதிதாக வருபவர்கள் அதிகபட்சம் 5 முதல் 10 நல்ல நிறுவனப் பங்குகளைக் கொண்ட போர்ட்ஃபோலியோவில் இருந்து தொடங்கலாம். இதன் முக்கியமான காரணம், ஒவ்வொரு நிறுவனத்தையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்பதுதான்.
நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கின்றன, கடன் அதிகரிக்கிறதா, லாபம் வளர்ச்சி இருக்கிறதா, நிர்வாகத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா, நிறுவனம் சார்ந்த துறையில் போட்டி எப்படி இருக்கிறது, அரசின் கொள்கைகள் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்க முடியும். மேலும், இது பங்கு முதலீட்டையும் சந்தையையும் புரிந்துகொள்ளவும், பாடம் கற்கவும் தேவையான காலகட்டம் என்பதால் குறைவான பங்குகளை வைத்திருப்பது நல்லது.
10–20 பங்குகள்... சமநிலையான போர்ட்ஃபோலியோ
மிதமான ரிஸ்க் எடுக்க விரும்பும், சந்தையைப் பற்றி ஓரளவு தெரிந்த முதலீட்டாளர்களுக்கு 10–20 பங்குகள் கொண்ட போர்ட்ஃபோலியோ ஒரு நடைமுறை அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால், இங்கே ஒரு முக்கியமான விஷயம் 10 பங்குகளும் ஒரே துறையைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடாது. இதில் வங்கி, நிதிச் சேவைகள், ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோமொபைல், ஃபார்மா, கேப்பிடல் கூட்ஸ் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களைக் கலவையாகத் தேர்வு செய்யலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட துறையில் ஏற்படும் பிரச்னை முழு போர்ட்ஃபோலியோவையும் பாதிக்கும் ரிஸ்க்கைக் குறைக்கலாம்.

20–30 பங்குகளுக்கு மேல் கவனம் தேவை!
20க்கு மேற்பட்ட பங்குகளை வாங்கும்போது, அதிக பங்குகள் அதிக டைவர்சிஃபிகேஷன் குறைவான ரிஸ்க் என்று நினைப்பது சரியல்ல. அதிகமான பங்குகளைச் சேர்க்கும்போது டைவர்சிஃபிகேஷனால் கிடைக்கும் பலன் குறையத் தொடங்கும். அதே நேரத்தில், பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனத்தையும் கண்காணிப்பதும் கடினமாகிவிடும்.
உதாரணமாக, 40 பங்குகள் வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த 40 நிறுவனங்களின் முடிவுகள், கடன், நிர்வாகம், மதிப்பீடு, துறை மாற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளை கண்காணிக்க முடிந்த அளவுக்கு மட்டும் பங்குகளின் எண்ணிக்கையை வைத்திருப்பது நல்லது.
இப்போது எல்லா பங்குகளுக்கும் சம அளவு பணம் போட வேண்டுமா என்ற கேள்வி வரும். அவசியமில்லை. ஒரு முதலீட்டாளர் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் 10 பங்குகளைத் தேர்வு செய்தால் ஒவ்வொரு பங்கிலும் ரூ.1 லட்சம் என்ற அளவில் முதலீடு செய்வது எளிதான அணுகுமுறை. ஆனால், எல்லா நிறுவனங்களின் தரமும், ரிஸ்க்கும் ஒன்றாக இருக்காது. அதனால், முதலீட்டாளர் தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

மேலும் போர்ட்ஃபோலியோவில் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளையும் கலவையாக வைத்துக்கொள்ளலாம். காரணம், எல்லாமே லார்ஜ்கேப் பங்குகளாக இருந்தால் அவற்றின் வளர்ச்சிக்கு அதிக காலம் தேவைப்படலாம். அனைத்தும் ஸ்மால்கேப் பங்குகளாக இருந்தால் அவற்றினால் போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க் அதிகமாக இருக்கக்கூடும்.
மொத்தத்தில் எத்தனை பங்குகள் என்பதைக் காட்டிலும் ஏன் வாங்குகிறோம் என்பதே முக்கியம்.
பங்குச் சந்தையில் வெற்றி என்பது அதிக பங்குகளை வைத்திருப்பதில் இல்லை; சரியான பங்குகளைத் தேர்வு செய்து, சரியான அளவில் முதலீடு செய்து, தொடர்ந்து கண்காணிப்பதில்தான் இருக்கிறது.
எனவே, எந்த ஒரு பங்கை வாங்கும்போதும் ஏன் இந்த நிறுவனத்தை வாங்குகிறோம், அதன் வருமானம் எப்படி வளர்கிறது, கடன் நிலை என்ன, லாபம் எப்படி இருக்கிறது, எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு என்ன, தற்போதைய விலை நியாயமானதா, எப்போது விற்க வேண்டும் என்ற அனைத்து கேள்விகளுக்கு முதலீட்டாளரிடம் பதில் இருக்க வேண்டும்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

















