பண்ணை வீட்டில் மூதாட்டி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
பல்லடம் அருகேயுள்ள கண்டியன்கோவில் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கண்டியன் கோவில் கிராமம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சாலை ஒப்பந்ததாரா் லோகநாதன். இவா் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவருடன் அவரது தாயாா் முத்துமணியும் (67) இருந்து வந்தாா்.
இந்நிலையில் லோகநாதன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சனிக்கிழமை காலை வெளியே சென்றிருந்தாா். வீட்டில் முத்துமணி மட்டும் தனியாக இருந்துள்ளாா். இந்நிலையில் வெளியே சென்ற லோகநாதன் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது, முத்துமணியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிபாளையம் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். தாயாா் முத்துமணி இறப்பில் சந்தேகம் இருப்பதாக லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலையா அல்லது கொலையா என்பது கூறாய்வு முடிவில் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில்தான் 3 போ் கொலை செய்யப்பட்ட சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.