'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில்...
பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சி அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி கடந்த மாதம் 13ம் தேதி வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் பதவி ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனிடையே எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படவில்லை.

சரிந்த எடப்பாடி போட்டோ!
இந்த நிலையில் இன்று காலை கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக செ.ம.வேலுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அ.தி.மு.க. மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகைக்கு வந்தார். அங்கு செ.ம.வேலுசாமி முறைப்படி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவியேற்றார். இதையடுத்து அ.தி.மு.க-வினர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த சுவர் கடிகாரம் சரிந்து தொண்டர்கள் மீது விழுந்த நிலையில், உடனடியாக அது அகற்றப்பட்டது. இதேபோல எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும் சரிந்தது. இருப்பினும் அதை அகற்றாமல், மீண்டும் வைக்குமாறு செ.ம.வேலுசாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன், வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், முன்னாள் அமைச்சர்கள் செ.தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேசமயம் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையாததே எஸ்.பி. வேலுமணி டீம் புறக்கணிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

யார் இந்த செ.ம.வேலுசாமி?
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியை சேர்ந்தவர் செ.ம.வேலுசாமி. அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான இவர், அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இருந்து, சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2001-2006 காலகட்டத்தில் வணிகவரி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பணியாற்றியவர். 2011ம் ஆண்டில் கோவை மாநகராட்சி மேயராக வெற்றி பெற்ற இவருக்கு, கோவை மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால் அதிகாரமிக்க நபராக செ.ம.வேலுசாமி வலம் வர துவங்கினார்.

செ.ம.வேலுசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், இவருக்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இந்த சூழலில் 2014ம் ஆண்டில் பல்லடத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற புகாரின் பேரில், செ.ம.வேலுசாமியின் பதவிகள் ஒரே நாளில் பறிக்கப்பட்டன. இதையடுத்து அமைச்சர் பதவிக்கு வந்த எஸ்.பி. வேலுமணி, கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்க நபராக மாறினார். பின்னர் செ.ம.வேலுசாமியை கட்சியில் தலையெடுக்க விடாமல் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து ஓரங்கட்டி வந்தார். அவருக்கு தேர்தல்களில் போட்டியிட வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன. தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தபோதும், கட்சி மாறாமல் தொடர்ந்து அ.தி.மு.க-விலேயே நீடித்து வந்தார். 12 ஆண்டுகளாக ‘வனவாசம்’ அனுபவித்து வந்த செ.ம.வேலுசாமி, மீண்டும் அதிகாரமிக்க பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.















