மரண தண்டனைக்குத் தடை கோரும் ஐ.நா. தீர்மானம்; இந்தியா எதிர்த்து வாக்களிக்க காரணம்...
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கே.எம்.பினு. பேரூர்க்கடை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நெடுமங்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் மருத்துவர் பினு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்குப் பயிற்சி (ஹவுஸ் சர்ஜன்சி) பெற்று வரும் முதுநிலை பெண் மருத்துவர் தனது உடலில் ஏற்பட்டுள்ள தடிப்பு குறித்து அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வகுப்பு முடிந்ததும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள தனது தனியார் சிகிச்சை அறைக்கு வருமாறு மருத்துவர் பினு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி மதியம் 12.30 மணியளவில் தனியார் சிகிச்சை அறைக்குச் சென்ற மாணவியிடம், உடல் பரிசோதனை செய்தபோது மருத்துவர் பினு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடிவந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுமியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து முறையிட்டார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் உடனடியாக நெடுமங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், பல மணி நேரமாகியும் போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. மாலையில் பாதிக்கப்பட்ட மாணவியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தகவலறிந்த அமைச்சர் ஜி.ஆர். அனில் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், போலீஸாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பினர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து குமாரபுரத்தில் உள்ள மருத்துவர் பினுவின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரைக் காவலில் எடுத்தனர். விசாரணையில், சிகிச்சை உதவி கோரியே அந்தப் பெண் மருத்துவர் தனது அறைக்கு வந்ததாகவும், முறையான உடல் பரிசோதனை மட்டுமே செய்ததாகவும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
பின்னர் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கும் பணிகளை முடித்த போலீஸார், மருத்துவர் பினுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில், அவரை மாலையில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்ற போலீஸாரின் அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜி.ஆர். அனில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கோரிக்கையை ஏற்று மருத்துவர் பினுவை சஸ்பெண்ட் செய்த சுகாதாரத்துறையின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

















