ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்கள்: மாயமான 2 சிறப்புக் காவல் அதிகாரிகள் ...
`பருப்புசாதம் இல்லாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது' - உணவுபழக்கம் குறித்து சோனியா காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது உணவு பழக்கம் குறித்த தகவல்களை அவரது மகள் பிரியங்கா காந்தியோடு சேர்ந்து பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சோனியா காந்தி எதிர்கொண்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று உணவு தொடர்பானதாகும். அவர் இந்தியா வந்த ஆரம்ப காலத்தில், இந்திய உணவுகளை சாப்பிடுவது அவருக்குக் கடினமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், அவர் அந்த உணவுகளை விரும்புவது மட்டுமின்றி, அவற்றைச் சமைக்கவும் கற்றுக்கொண்டார்.
சோனியா காந்தி தனது வீடியோவில்,''இந்தியாவில் எனக்கு பிடித்த உணவு வகைகளில் பெங்காலி மற்றும் குஜராத்தி (குறிப்பாக சூரத் பகுதியைச் சேர்ந்தவை) உணவுகள் அடங்கும். மேலும், எங்களது சமையலறையில் எப்போதும் இருக்கும் முக்கிய உணவுகளில் ஒன்று துவரம் பருப்பு ஆகும். எனக்கு கபாப், சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன், தால் மக்கானி, காஷ்மீரி கோஃப்தா ஆகியவை மிகவும் பிடிக்கும்" என்று கூறுகிறார்.

அப்போது பிரியங்கா காந்தி குறுக்கிட்டு, பருப்பு-சாதம் குறித்து அவருக்கு நினைவூட்டுகிறார்.
அதற்கு சோனியா காந்தி, "எங்கள் வீட்டில், நான் வந்த நாளிலிருந்து இன்றுவரை, துவரம் பருப்பு மட்டுமே சமைக்கப்படுகிறது. வேறு எந்தப் பருப்பும் சமைக்கப்படுவதில்லை" என்று கூறுகிறார். பிரியங்கா, தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது தங்கள் தாயார் தங்களுக்கு 'கான்ட்வி' (khandvi) செய்து தருவார் என்று நினைவு கூர்கிறார். இது செய்வது மிகவும் எளிதானது என்று சோனியா குறிப்பிடுகிறார். கான்ட்வி என்பது குஜராத்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான காரமான சிற்றுண்டி ஆகும்.
அதன்பிறகு, இந்த உரையாடல் இந்திரா காந்தியைப் பற்றிய பேச்சுக்குத் திரும்புகிறது. பிரியங்கா தனது பாட்டி குறித்து கூறுகையில், இந்திரா காந்திக்குச் சமைக்கத் தெரியாது என்றார். அதனை சோனியா காந்தி இதை மறுத்தார். தனது மாமியாருக்குச் சமைக்கத் தெரியாது என்பது உண்மைதான் என்றாலும், உணவைச் சுவையாக மாற்ற அதில் எதைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்த நுணுக்கமான அறிவு அவருக்கு இருந்தது என்று அவர் கூறினார்.
"எனது கதையில் உணவுக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் உண்டு. ஒரு நல்ல உணவைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் நான் ராஜீவைச் சந்தித்தேன், நாங்கள் காதலிக்கத் தொடங்கினோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவும் அதே போல, ஒவ்வொரு வேளை உணவின் வழியாகவே எனக்குள் வந்தது. ஆரம்பத்தில், உணவுகளின் பன்முகத்தன்மை என்னைக் வியக்க வைத்தது. அதே சமயம் காரமான சுவை சற்று அச்சமூட்டியது.
ஆனால் இன்று, பருப்பு சாதம் எனக்கு வீட்டின் சுவையாக மாறிவிட்டது. அதைச் சாப்பிடாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது," என்று காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey Of Love) என்ற புத்தகம் வெளியானது. அந்த நூலில், தனது வாழ்க்கையில் உணவு எப்போதும் எவ்வளவு முக்கியப் பங்கு வகித்தது என்பது குறித்த பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதில் குஜராத்தி உணவுகள் எவ்வளவு சுவையானவை என்பதைக் கண்டறிந்தபோது, 1969ம் ஆண்டு இந்திரா காந்தியுடன் குஜராத் சென்றிருந்தபோது தான் நடந்துகொண்ட விதம் குறித்து தனக்கு முட்டாள்தனமாக உணர்ந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அப்போது அவர் எந்த உணவையும் சுவைக்க மறுத்துவிட்டு, நான்கு நாட்கள் தர்பூசணி மற்றும் பிற பழங்களை மட்டுமே உண்டு வாழ்ந்திருந்ததாகவும், இந்திய மசாலாப் பொருட்களின் வாசனையிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முதன்முதலில் டெல்லிக்கு வந்து, கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் வீட்டில் தங்கியிருந்தபோது மசாலாப் பொருட்களின் வாசனையிலிருந்து தன்னால் தப்பிக்கவே முடியவில்லை என்றும், அந்த வாசனை தனது தலைமுடியிலும் உடைகளிலும் ஊடுருவிக்கொண்டே இருந்தது என்றும் சோனியா காந்தி எழுதியுள்ளார்.
















