திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அர...
பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன்புமணி! | கழுகார்
‘தில்’லான மாஜி அமைச்சர் வசமிருக்கும் மேற்கு மண்டலத்தில், உடன்பிறப்புகள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம். அங்கு ஏற்கெனவே அனைத்து கன்ட்ரோலும் கம்பெனி ஆட்களிடம் சென்றுவிட்டன. அவரின் அனுமதியில்லாமல் அறிவாலயத்துக்குச் செல்வதற்குக்கூட முடியாத நிலையில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ‘தில்’ மாஜி, ‘`இனிமேல் யாரும் நிகழ்ச்சிகளுக்காகப் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது. அதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. உங்களால் முடிந்தால் நிகழ்ச்சியை நடத்துங்கள்... இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இனி யாரும் வசூல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது’’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டாராம்.

``வசூல் செய்யாமல் எப்படிக் கூட்டம் நடத்துவது... கூட்டம் நடத்தாமல் கட்சியை எப்படி நடத்துவது... தலைமைக்கு எங்கள் பெயர் தெரியாமலிருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ, அனைத்தையும் செய்கிறார் மாஜி. அவரின் கம்பெனி ஆட்கள் கட்சிக்கு வாங்கிக்கொடுத்த கெட்ட பெயரைவிட, நாங்கள் ஒன்றும் செய்துவிடவில்லையே...’’ என்று மேலிட சீனியர்களிடம் கடுகடுத்திருக்கிறார்கள் மேற்கு மண்டல நிர்வாகிகள்!
நீலகிரியில், அரசு கொறடா ராமச்சந்திரனை சுயமாக இயங்கவிடுவதில்லை என்று, மன்னர் புள்ளிமீது ஏற்கெனவே ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும்விதமாக, சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ராமச்சந்திரனின் தொகுதிக்குள் பணிபுரியும் ஒரு வனத்துறை அதிகாரி திடீரென மாற்றப்பட்டிருக்கிறார். அந்த அதிகாரி குறித்து மன்னர் புள்ளியிடம் நிர்வாகிகள் சிலர், சில வாரங்களுக்கு முன்பாகப் புகாரளித்திருந்தனர். ராமச்சந்திரனிடம் எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், அந்த அதிகாரியை மாற்ற வைத்துவிட்டாராம் மன்னர் புள்ளி.

இதனால், ராமச்சந்திரன் தரப்பில் கடுமையான பொருமல் கிளம்பியிருக்கும் நிலையில், முந்திரிகளைக் கொறித்தபடியே அந்த அதிகாரி குறித்து நிர்வாகிகளுடன் மன்னர் புள்ளி பேசும் வீடியோ வெளியே லீக் ஆகிவிட்டது. இதில் கடுப்பான மன்னர் புள்ளி, ‘அந்த வீடியோவை எடுத்தது யார்?’ என்கிற தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறாராம்!
பா.ம.க-வில், தந்தை - மகனுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகி, ‘இனி இணைப்பு சாத்தியமே இல்லை’ என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ராமதாஸுடன் மிக நெருக்கமாகிவிட்டதாம் தி.மு.க தரப்பு. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க கூட்டணிக்குள் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க அணியைக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறதாம். முதற்கட்டமாக, ராமதாஸின் அதிதீவிர ஆதரவாளர்கள் ஐவருக்கு சீட் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதேபோல, அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, ராமதாஸை நேரடியாகத் தேர்தல் பிரசாரம் செய்யவைக்கவும் ஆயத்தமாகிவருகிறதாம் தி.மு.க தரப்பு. இந்தத் தகவலறிந்து, அன்புமணி கடும் டென்ஷனாகியிருப்பதாகத் தகவல்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்... பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்பதை எடப்பாடியிடம் வலியுறுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அதை எடப்பாடி செய்ய மறுத்ததால், அவர்மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் தங்கமணி. பதிலுக்கு எடப்பாடியும், தங்கமணியை ஒதுக்கத் தொடங்கினார். எந்த அளவுக்கு என்றால், பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க எடப்பாடி டெல்லிக்குச் சென்றபோதும், அமித் ஷா சென்னைக்கு வந்தபோதும்கூட அந்த நிகழ்வுகளுக்கு தங்கமணி அழைக்கப்படவில்லை.

இப்படியான சூழலில், திடீரென எடப்பாடி - தங்கமணி இடையே சமரசம் பூத்திருக்கிறது. அதன் எதிரொலியாக, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதன்முறையாக சென்னைக்கு வந்திருந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடியுடன் கலந்துகொண்டிருக்கிறார் தங்கமணி. மீண்டும் லைம்லைட்டுக்கு தங்கமணி ரீஎன்ட்ரி ஆகியிருப்பதுதான் அ.தி.மு.க-வில் ஹாட் டாபிக்!
பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமையிலான முதல் மாநில மையக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் வரவில்லையாம். ‘அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் அவருடைய சிலையைத் திறந்துவைத்துப் பேச ஏற்கெனவே நேரம் கொடுத்துவிட்டார் அண்ணாமலை. அதனால்தான் அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை’ என்று அண்ணாமலை தரப்பு விளக்கமளிக்கிறது.

அதேசமயம், ‘ஆந்திராவில் சிலையைத் திறந்தது டிச. 22-ம் தேதி. ஆனால், பியூஷ் கோயல் சென்னைக்கு வந்தது டிச.23-ம் தேதிதான். அண்ணாமலை நினைத்திருந்தால் ஆந்திராவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்திருக்க முடியும். தனக்குப் பதவி வழங்கப்படாத கடுப்பில்தான், அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல நடந்துகொள்கிறார் மலை...’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!

















