செய்திகள் :

புலம்பெயர்வு: கண்ணீர் வரவழைக்கும் பல கதைகள்; பாதிக்கப்பட்ட கிராமங்கள் | அணை ஓசை 14

post image

கண்ணீர் வரவழைக்கும் பல கதைகள் இருந்தன. மேட்டூர் அணை கட்டப்படுவதால் தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகள், கிராமங்களில் வாழ்ந்து வந்த பொதுமக்கள், முதியவர்கள், தங்கள் குழந்தை குட்டிகளுடன் தங்களின் சொற்ப மூட்டை, முடிச்சுகளுடன் வீடுகளை, நிலங்களை விட்டு பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

தற்போது, பல்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான பாதிக்கப்பட்ட மனிதர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. கடந்த 4 வருடங்களாக எண்ணற்ற மக்களை பல இடங்களில், பல ஊர்களுக்கு சென்று நேரில் சந்தித்தேன்.

மேட்டூரை அடுத்த கொளத்தூரில் வசித்து வரும் எனது நண்பர் திரு. மகேஷ் மூலம், அருகில் பூமனூர் கிராமத்தில் வசித்து வந்த திரு.செல்வம் என்ற நண்பரின் அறிமுகம் கிடைத்தது.

மண்ணின் மைந்தரான செல்வத்தின் பூர்வீக கிராமம் தற்போது அணையில் தேங்கி நிற்கும் நீரின் ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. “ஞாயம்பாடி” என்ற அந்த கிராமம் அதிக மக்கள் வாழ்ந்த ஒரு கிராமமாக 100 வருடங்களுக்கு முன்பு இருந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக அங்கு மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அணை கட்டிய பிறகு, மெள்ள, மெள்ள நீர் தேங்கி நின்ற போது, அங்கிருந்து தங்கள் வாழ்விடத்தை துறந்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த துன்பத்தை அனுபவித்த போது சிறுவர்களாக இருந்த சிலரை திரு.செல்வம் மூலமாக தேடி கண்டுபிடித்து, தற்போது பெரும் முதியவர்களாக வாழ்ந்து வரும் சிலரிடம், இந்த தொடருக்காக நேர்காணல் நடத்தினேன்.

பல்வேறு ஊர்களுக்கு பிரயாணம் செய்ய நேரிட்டது. அந்த சமயத்தில் அந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களின் இன்றைய தலைமுறை எப்படி வாழ்கிறார்கள் என்ற எமது கேள்விக்கு, சிலர் நன்கு கல்வி பயின்று நல்ல நிலையில் இருப்பதையும் காண முடிந்தது. சிலர் இன்னமும் கூலித் தொழில் மற்றும் பழைய மீன்பிடி தொழிலை விடாமல் வேறு வழியின்றி துன்பத்தில் உழல்வதையும் காண நேர்ந்தது.

அணை ஓசை 14

கர்நாடக மாநிலத்திலிருந்து கரைபுரண்டு ஓடி வரும் காவிரி தமிழ்நாட்டின் எல்லையில் பிலிகுண்டு என்ற இடத்தில் நுழைகிறது. ஒகேனக்கல் என்ற இடத்தில் அருவியாக வீழ்ந்து, அடர்மிகு வனப்பகுதியில் தெற்கு திசை நோக்கி கரைபுரண்டோடி, பாலாற்றுடன் கலந்து கிழக்கு திசையில் பயணிக்க தொடங்குகிறது. அங்கிருந்து காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பல கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. அங்கு தொன்றுதொட்டு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால், ஒகேனக்கல் அருவி உள்ள இடத்திலிருந்து பாலாறு இணையும் இடம் வரை கடும் வனப்பகுதி. மக்கள் வசிக்க வசதியில்லாத வகையில் மேற்கு பக்கம் மாதேஸ்வரன் மலை தொடர், கிழக்குப் பகுதியில் ரிசர்வ் காடுகள் எனும் வனப்பகுதியும் அமைந்துள்ளதால் சுமார் 20 கி.மீ தூரம் மக்கள் இன்று வரையிலும் அங்கு வசிக்கும் வாய்ப்பு அமையப் பெறவில்லை!

மேட்டூர் அணை கட்டப்பட்டதால், மக்கள் வாழ்ந்த பகுதிகளில், இவர்களைப் பற்றிய பல்வேறு சுவை மிகுந்த வாழ்க்கைக் கதைகளை நாம் பார்ப்பதற்கு முன்பு, இது போன்ற விவசாயிகளின் (ரயத்துவாரி) நிலங்களை, கையகப்படுத்தும் வேலைகள் 100 வருடங்களுக்கு முன்பு இந்த அணைக்காக, எப்படி நடந்தது என்பதை பார்த்து விட்டு அவர்களை பின் தொடரும் போது, நமக்கான புரிதல் இன்னும் மேம்படும்.

நிர்வாக வழிமுறைகள்

காவிரி மேட்டூர் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அரசாணை எண் 164 மூலம் 8.4.1925 அன்று ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவசர வேலையாக நீர்த்தேக்க பயன்பாட்டுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 7408.73 ஏக்கரும், சேலம் மாவட்டத்தில் இருந்து 12,122 ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 19,530.73 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் எனவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்வாய் பணிகளுக்காக 4702 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக ராவ் பகதூர் பி. டி. சீனிவாச ஆச்சாரியார், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருக்கு உதவிட கிளார்க், டைப்பிஸ்ட், பியூன்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

மேற்கண்ட அலுவலகப் பணியாளர்களின் மாத சம்பளம் ரூபாய் 12-ல் இருந்து ரூபாய் 90 வரை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றைக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும். ஒரு சப் கலெக்டர், இரண்டு டெபுடி கலெக்டர்களும் முறையே ரூ 1566 மற்றும் ரூ 679 மாத சம்பளத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் அதிகாரிகளை நியமிப்பதில் சில வில்லங்கங்களும் நடந்தேறியது ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. திரு டி. எஸ். சுப்பய்யர், வட ஆற்காடு தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவரை டெபுடி கலெக்டராக சிறப்பு பணிக்கு நியமனம் செய்து, திரு. பி. ஹாக்கின்ஸ் (PWD இணைச்செயலர்) அரசாணை எண் 196 I, 2.5.1925 தேதி உத்தரவு பிறப்பிக்கிறார்.

ஆனால், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பி.டி.சீனிவாச ஆச்சாரியார் தலைமைச் செயலகத்தில் சூப்பரிண்டென்ட்டன்ட் ஆக பணியாற்றி வரும் திரு. வி. பொன்னுசாமி பிள்ளை என்பவரை டெபுடி கலெக்டர் பதவிக்கு பரிந்துரைக்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியும் எனவும் அங்கீகரிக்கப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என்றும் 17.4.1925 அன்று பரிந்துரைக்கிறார்.

அரசு துணைச் செயலர் திரு வி.ராமகிருஷ்ணா அடுத்த நாளே திரு பொன்னுசாமி பிள்ளை மார்ச் 1924 இல் தான் அதிகாரிகள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர். ஆனால், இவருக்கு முன்பாக 18 பேர் சீனியர்களாக உள்ளனர். நிலம் கையகப்படுத்தும் வேலைகளுக்கு அனுபவமுள்ள அதிகாரிகளை நியமிப்பதே பழக்கம் என்று தனது ஆட்சேபனையை தெரிவித்து உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதுகிறார்.

நீர் தேங்கி நிற்கும் அணையின் ஓர் பகுதி

எனவே, இதுகுறித்து வருவாய் துறை செயலர் திரு E.W. லீ, (LEGH) அவர்களிடம் இறுதி முடிவு எடுக்க கோப்புகள் செல்கிறது. திரு. லீ, தனது பரிந்துரையில் சிறப்பு அதிகாரியின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டாலும் “குறிப்பிட்ட பொன்னுசாமி பிள்ளை எனக்கு கீழே சேலத்தில் பணிபுரிந்து இருந்தாலும் அதிகாரிகளின் முறையிலிருந்து (சீனியாரிட்டியிலிருந்து) வெளியே எடுக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

சீனியர் அதிகாரிகளை தவிர்த்து குறைந்த அனுபவம் உள்ள அதிகாரியை நியமிப்பது கொள்கை அளவில் மோசமானது. ஆனால் சேலத்தைச் சேர்ந்தவர் டி. எஸ். சுப்பய்யர், (பகதூர் பி.சுப்பிரமணி ஐயரின் மகன்) மற்றும் நம்பகமானவர். மேட்டூர் நில கையகப்படுத்தும் வேலைக்கு நன்றாக பயிற்சி பெற்ற இந்த தாசில்தார் போதுமானது என்று பரிந்துரைக்கிறார்”.

இறுதி முடிவுக்கு LAW MEMBER திரு. C. P. ராமசாமி ஐயருக்கு அனுப்பி 25. 4. 1925 அன்று அவரின் ஒப்புதலோடு டி. எஸ். சுப்பய்யர், டெபுடி கலெக்டர் பதவியில் அமர்த்தப்படுகிறார்.

நீர் தேங்கி நிற்கும் அணையின் இன்னொரு பகுதி

இதில் சிறப்பு என்னவென்றால் சிறப்பு அதிகாரியின் பரிந்துரை மறுக்கப்பட்டாலும், ஒளிவு மறைவற்ற கருத்துப் பரிமாற்றங்கள், தெளிவான ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதே! எந்த சமரசமும் இன்றி வேலை நியமனம் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

கிராமங்களில், மேட்டூர் அணைக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள், ஏராளமான குடியிருப்புகள், மதரீதியான கோவில், சர்ச் போன்ற கட்டடங்கள் இருந்தன. நிலங்களை இழக்கும் மக்களுக்கு மரியாதையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மதரீதியான கட்டடங்களை கையகப்படுத்தும் போது, அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.

அதிகாரிகளின் போக்குவரத்துக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு குதிரைக்கு, ஒரு மாதத்துக்கு, ஒரு டெபுடி கலெக்டருக்கு ரூ 25/- என்ற வகையில் அலவன்ஸ் தர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நில உரிமையாளரின் வீடு ஒரு கிராமத்தில் இருக்க, வேறொரு கிராமத்தில் அவருக்கு உண்டான நிலம் அமைந்திருந்தது. அதற்காக அதிகாரிகள் தொலைதூரப் பிரயாணம் மேற்கொள்ள ஏதுவாக பயணப்படி வழங்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட பணம் சிக்கனமாக செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க சிறப்பு மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவை உறுதி செய்யப்பட்டது. சிறப்பு அதிகாரி 5.6.1925 தேதியிட்ட ஓர் அறிக்கையில் நவப்பட்டி, மேட்டூர் மற்றும் சாம்பள்ளி கிராமங்களுக்கு நேரில் சென்றதாகவும் அதிகாரிகள் அலுவலர்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் ரூ4/- அல்லது ரூ 5/- மாத வாடகையில் கிடைப்பதையும் பதிவு செய்திருப்பது மிகுந்த ஆச்சர்யத்தையும் இப்போது நமக்கு புன்முறுவலையும் வரவழைக்கும்.

காவேரிபுரம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருப்பதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடங்கிய கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் பெரும்பாலும் பவானி தாலுகாவை சார்ந்ததாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

AI

மொத்த செலவினத்தைக் குறைக்க பெரும் கவனம் செலுத்தி சுமார் அரை லட்சம் சேமித்திருக்கிறேன் என்ற சுய தம்பட்டத்தையும் நம்மால் அதில் கண்டுணர முடிகிறது.

ஈட்டுத்தொகைக்கு பதிலாக வேறு நிலங்களை தகுதி உள்ளோருக்கு வழங்கவும், அந்தியூர் ரிசர்வ் காடுகளிலிருந்து சுமார் 4000 ஏக்கர் நிலங்களை விடுவித்து, சாதாரண நிலங்களாக மாற்றி தர கோயம்புத்தூர் கலெக்டர் தயாராக இருப்பதையும், “எண்ணமங்கலம்” என்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் அளவிடப்படாத நிலங்கள் பெருமளவில் இருப்பதை விவசாயிகளுக்கு ஈடாக தர இயலும் என்பது போன்ற ஆக்கப்பூர்வ யோசனைகளையும் பதிவு செய்கிறது அவரது அறிக்கை. அரசு இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மெட்ராஸ் மாகாணத்தின் பிரிட்டிஷ் அரசு மேற்கண்ட ஏற்பாடுகளை விரிவாக செய்து கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்தத் திட்டத்தால் தங்கள் நிலங்களை பறிகொடுக்கும் வாய்ப்புள்ள விவசாயிகள், பொதுமக்கள் அப்போது என்ன எதிர்வினை ஆற்றினார்கள் என்ற அடிப்படைக் கேள்வி எவருக்கும் எழும்!

அடிமைப்பட்டு கிடந்த தேசத்தில் ஏழை விவசாயிகள் என்ன செய்து விட முடியும்? ஆனாலும், தங்கள் கோரிக்கைகளை மகஜராக (விண்ணப்பம்) எழுதி அரசிடம் அளித்தனர்.

அணை கட்டப்படுவதால் நீரில் மூழ்கும் என கீழ்க்கண்ட கிராமங்கள் குறியிடப்பட்டன. அவை, சாம்பள்ளி, தின்னப்பட்டி, மூலக்காடு, கொளத்தூர், சிங்கிரிப்பட்டி, காவேரிபுரம், கூனாண்டியூர், கோனூர், சோளப்பாடி, கருங்கலூர், நாகமரை, மஞ்சாரஹள்ளி, பத்ரஹள்ளி, கெண்டன ஹள்ளி, சவரியூர் போன்றவை! ஞாயம்பாடி, கோவிந்தப்பாடி, பண்ணவாடி, தண்டா, செட்டியூர், சவேரியார் பாளையம், தார்க்காடு சுந்தராபுரம், போன்ற கிராமங்களும் இதில் அடங்கும்.

பல்வேறு சமயங்களில் பலவித கோரிக்கைகளையும், தங்களின் ஆதார சொத்து, உயிரினும் மேலான நிலம், வாழ்வளிக்கும் மண்ணை இழப்பதற்கு மனமில்லாமல், கண்ணீரோடு தங்கள் குருதியையும் கலந்து எழுதி மாற்று ஏற்பாடுகளுக்கு அரசிடம் விண்ணப்பித்தனர்.

மேலும் அவர்களை பின் தொடர்வோம்.

காவிரி நன்னீர் சிறப்பு

நிலம் கையகப்படுத்துதல்: 18,435.84 ஏக்கர்கள் நிலம்; 4,146 வீடுகள் | அணை ஓசை 13

மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சிமேட்டூர் அணை கட்டுமானம் குறித்த வரலாற்று நிகழ்வுகளில், இத்தொடரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான விவசாய மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களின் துயரங்கள் கு... மேலும் பார்க்க

சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே - எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12

சிமெண்ட் போக்குவரத்துரயில் பாதை கட்டமைப்புஅணை கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், இயந்திரங்கள், உணவுப் பொருட்கள், கல், மணல் போன்ற பெருமளவிலான பொருட்களை எளிதாகக் கொண்டுவர போக்குவரத்து வசதிகள் மிக அவசியம... மேலும் பார்க்க

சுத்தியல், ட்ரில் பிடித்த பெண்கள்; மேட்டூர் அணை கட்டுவதில் ஒட்டர் சமூகத்தினரின் பங்கு!| அணை ஓசை 11

சேலம் கேம்ப்புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததினால் ஆற்றுக்கு இடது கரையில் நல்ல உயரமான இடத்தில் "எல்லீஸ் மதகுகள்" வேலை நடக்கும் இடத்திற்கு மிக அருகிலும் மற்றும் அணையின் இடது பக்கவாட... மேலும் பார்க்க

நாதிர் ஷா கடத்திய கோஹினூர் வைரம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

வரலாற்றில் இன்று!மார்ச் 22, 1739: இந்த நாளில்தான் நாதிர் ஷா டெல்லியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மயில் சிம்மாசனத்தையும், கோஹினூர் வைரத்தையும் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றினார்.நாதிர்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10

பரிசல் பயன்பாடு1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இ... மேலும் பார்க்க