ஜனநாயகன்: விஜய் பட சென்சார் வழக்கு; சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உயர் நீ...
"பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு" - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்எல்ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு, இதில் பங்கு கொடு எனக் கேட்கிறார்கள்.
இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்துகொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்கக் கூடாது. நாமும் கொடுக்க விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இல்லை என்றால் இந்தியா கூட்டணியே கிடையாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால்தான் இந்தியா கூட்டணியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள்தான் இருக்கிறது.

பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இவருடைய பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, "திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும்தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.
கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்கூட பேசவேண்டிய இடத்தில்தான் பேசியிருக்கிறேன்.

வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைப்பிடிப்பதுதான் நல்லது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது" எனப் பதிவிட்டுள்ளார்.















