பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் என்னென்னவோ வழிகளைப் பின்பற்றுகிறார்கள். வீட்டில் ஏ.சி வசதி இருந்தால் ஏ.சி போட்டு உள்ளே இருந்து கொள்கிறார்கள். ஆனால் ஏ.சி வசதியும் இல்லாமல் திடீரென மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது.
ஐ.டி நகரமாக கருதப்படும் பெங்களூருவும் இதற்கு விதிவிலக்கல்ல. பெங்களூருவில் வசிக்கும் பிரியா என்ற பெண் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏ.சி அறையை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் அதில் தங்கி இருந்து வெப்பத்தை தணித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஹோட்டலுக்குச் சென்று ஏ.சி அறை புக்கிங் செய்வது மற்றும் ஏ.சி அறைக்குச் செல்வதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், வீட்டில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ஏ.சி அறையை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து ஏ.சி காற்றை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளார். `மழை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மழை வரவில்லை. எனவே ஏர் கூலர் அல்லது ஏ.சி வாங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அனைத்தையும் டெலிவரி செய்ய ஒரு வாரம் எடுக்கும் என்று சொல்லிவிட்டார்கள். குளிர்சாதன வசதி சாதனங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று பார்த்தோம். அதுவும் அருகில் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆன்லைனில் ஏர்கூலர் ஆர்டர் செய்துவிட்டு ஒரு நாளை ஹோட்டல் ஏ.சி அறையில் செலவிடலாம் என்று முடிவு செய்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார். ஏர் கண்டிஷனர் இல்லாமல் தன்னால் இனி சமாளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பிரியாவின் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி இருக்கிறது.





















