அச்சம் VS அறிவாளி! பங்குச் சந்தைச் சரிவில் நீங்க எப்படிப்பட்ட முதலீட்டாளர்?
பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க முடிவு?
பெண்களுக்கு நாடாளுமன்றன்றத்தில் 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது. 2023ம் ஆண்டு இதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மத்திய அரசு உயிரூட்ட முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக நடப்பு நாடாளுமன்றத்தில் இரண்டு புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட இருக்கிறது.
இது நடைமுறைக்கு வந்தால் மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும். அதாவது 273 இடங்கள் அதிகரிக்கப்படும். இதன்மூலம் தற்போது இருக்கும் ஆண் உறுப்பினர்களின் பலம் குறையாமல் இருக்கும். புதிய எண்ணிக்கையை சேர்க்கும் போது மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 816 ஆக அதிகரிக்கும். அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க 409 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கும்.

கடந்த 50 ஆண்டுகளில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது கிடையாது. இப்போதுதான் முதல் முறையாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் மாநிலங்களவை மற்றும் சட்டமேலவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த வித மாற்றமும் இருக்காது. மக்களவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சட்டமன்றத்திலும் அதே அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
அடுத்து நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய நடைமுறைப்படி தேர்தல் நடத்தப்படலாம். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக தொகுதி எல்லை வரையறை மசோதா மற்றும் இரண்டு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். தற்போது இந்த மசோதாவை தனித்து நிறைவேற்ற பா.ஜ.கவிற்கு அவையில் பெரும்பான்மை கிடையாது.
ஆனால் கூட்டணி கட்சிகளின் துணையோடு வரும் 4ம் தேதி முடியும் பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்ற பா.ஜ.க திட்டம் திட்டமிட்டுள்ளது. அதுவும் முடியாமல் போகும்பட்சத்தில் இதற்காக தனியாக சிறிய சிறப்பு கூட்டத்தை கூட்டுவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு மசோதாக்களுக்கும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இது தொடர்பாக இரண்டு முறை இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஒன்று எதிர்க்கட்சிகள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளுடனும், மற்றொன்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடனும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதோடு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி எல்லை நிர்ணயிப்பை தொடங்குவதற்கு பதில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லையை நிர்ணயிக்கலாம் என்று அமித் ஷா அரசியல் கட்சிகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி எல்லையை மாற்றியமைத்தால் 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் இதனை அமல்படுத்த வசதியாக இருக்கும் என்றும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் பிறகு தொகுதி எல்லையை மாற்றியமைப்பது அதிக நேரம் பிடிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதோடு 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு கொடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா நடத்தி வரும் பேச்சுவார்த்தை மேலும் சில தினங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ர் ஓரிரு நாட்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தொகுதி எல்லை வரையறை செய்யப்படும்போது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில், தற்போதைய 80 மற்றும் 40 உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 மற்றும் 60 தொகுதிகளாகவும், கேரளாவில் உள்ள தொகுதிகள் 20ல் இருந்து 30 ஆகவும் உயரும். தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் பாதிக்கப்படும். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த அளவு எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் அங்கேயும் அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இம்மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது. யூனியன் பிரதேசங்களிலும் மக்களைவை தொகுதிகள் அதிகரிக்கப்படும். இதே போன்று தனித்தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.






.jpeg)








