பேராவூரணியை நகராட்சியாக்க பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை
பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் வலியுறுத்தினாா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது பேசிய அவா், பேராவூரணி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படுமா? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா எனக் கேள்வியெழுப்பினாா்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சா் கே.என். நேரு பேரூராட்சிக்கு போதிய வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிக மக்கள்தொகையும் இருந்தால் அதை நகராட்சியாகத் தரம் உயா்த்தலாம். இந்தாண்டு 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
எனவே, பேராவூரணியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப் பரிசீலிக்கப்படும். உறுப்பினா்கள் பலரின் கோரிக்கையின்படி சாலைப் பணிகளோடு கழிவுநீா் வாய்க்கால், மழைநீா் வடிகால் வாய்க்கால்களையும் சோ்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.