Stranger Things 5 Review | Netflix Web series | Cinema Vikatan
`பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம்!' - பரிசுத் தொகை வருவதை உறுதி செய்கிறதா வழிகாட்டல் சுற்றறிக்கை?
பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், கரும்பு முதலியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை கடந்த சில வருடங்களாக மக்களுக்கு வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
ஆரம்பத்தில் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிறகு ரொக்கமாக பணமும் சேர்த்து வழங்கத் தொடங்கினர். ஆயிரம் ரூபாயாக இருந்த அந்தத் தொகை கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்டு இரண்டாயிரமாக வழங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் பெரும்பாலான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதால் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் தொகை தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

எனினும் அரசு இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவை எடுக்கவில்லை.
கடந்த வருடத்துக்கு முந்தைய ஆண்டு தொகை வழங்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கப்படவில்லை.
எனவே இந்தாண்டு தொகை இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் இது தொடர்பான ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.
அதில், பொங்கல் பரிசு தொகுப்பில் இம்முறை பணம் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `பணத்தை பட்டுவாடா செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். பணம் வழங்கும் பணியினை வெளி நபர்களிடம் வழங்க வேண்டாம். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடையின் பணியாளர்கள் மட்டுமே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.!
நியாயவிலைக் கடைகள் மூலமே இந்த தொகை வழங்கப்பட்டு வருவதால் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளில், இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வாய்ப்புள்ளது.
எனவே அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிப் பட்டிருக்கிறது.
ஆனால் எவ்வளவு தொகை என்பது தெவிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களாக இந்தத் தொகையை 5000 ஆக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
எவ்வளவு தொகை என்பது குறித்து துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம்.
’மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டமாக விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் நிதிச்சுமையைக் காரணம் காட்டி சென்ற வருடம் போல இந்தாண்டும் பணம் வேண்டாமென்றுதான் முதலில் அரசு முடிவு செய்ததாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பிறகே, இந்தாண்டு தேர்தல் வேறு இருப்பதால், விஷயம் தேர்தலில் எதிரொலிக்கலாமென அஞ்சியே பணம் கொடுக்கலாமென்கிற முடிவுக்கு பிறகு வந்ததாக கூறுகிறார்கள்.

அதேநேரம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என்கிற அளவில் மட்டுமே தொகை இருக்கும் என்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிதித் துறையில் பேசி கடைசி நேரத்தில் தொகை எவ்வளவு என்பது முடிவாகலாம்’ என்றனர் அவர்கள்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொகையை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நான்கைந்து பரிசுப் பொருட்கள் பணமும் சேர்த்து வழங்கும் போது வேலைப்பளு மற்றும் அதிகப்படியான தொகையைக் கையாள்வதில் எழும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் அவர்கள், மக்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகையை வரவு வைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

‘நம்மை விட சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அப்படி வழங்கும் போது இங்கு வழங்குவதில் என்ன சிக்கல் எனக் கேட்கின்றனர் அவர்கள்.
நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, ‘பணத்தை எடுத்துச் செல்கிற போது பாதுகாப்பு பிரச்னை, கடைகளில் கூட்ட நெரிசல் என நடைமுறைச் சிக்கல்களை நாங்களும் பல முறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டோம். ஆனால் ஏன் தெரியவில்லை, இந்த விஷயத்தில் காது கொடுக்கவே மறுக்கிறார்கள்’ என்கிறார்கள் இவர்கள்.
பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது குறித்து உயரதிகாரிகளைக் கேட்டால்,
`அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த விஷயத்தில் பரிந்துரைதான் செய்ய முடியும்’ என முடித்துக் கொண்டார்கள்.



















