நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
`பொதுவாழ்வில் நன்னடத்தை தேவை' தண்டனைக்கு தடைவிதிக்க மறுப்பு - முன்னாள் அமைச்சரின் MLA பதவி தப்புமா?
மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மாணிக்ராவ் கோடே. மாணிக்ராவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து 1995ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசின் ஒதுக்கீட்டில் இருந்து வீடு பெற்றனர். இந்த விவகாரம் இப்போது பிரச்னையாகி இருக்கிறது. பொய்யான காரணத்தை கூறி அரசிடமிருந்து வீடு வாங்கியதற்காக மாணிக்ராவ் மற்றும் அவரது சகோதரருக்கு நாசிக் கோர்ட் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனையை தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மாணிக்ராவ் மும்பை மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டார்.

அதோடு தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். தண்டனை விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மாணிக்ராவ் கோடேயும், அவரது சகோதரரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது ஜாமீன் மனு நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணிக்ராவ் கோடே மற்றும் அவரது சகோதரருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், 'ஜனநாயகத்திற்கு பொது வாழ்வில் நன்னடத்தை தேவை' என்று தெரிவித்தது. இதையடுத்து மாணிக்ராவ் கோடேயின் எம்.எல்.ஏ பதவி கேள்விக்குறியாகி இருக்கிறது. தண்டனைக்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டதால் மாணிக்ராவ் கோடேயின் பதவியை பறிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவு செய்வார் என்று சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து தண்டனைக்கு தடை விதிக்கும்படி கோரலாம். சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியும்.
மாணிக்ராவ் கோடே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதால் அந்த இடத்திற்கு வர தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 6 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.


















