மகாராஷ்டிரா தேர்தல்: 'பெண்களுக்கு முன்கூட்டியே ரூ. 1500' - பாஜகவின் திட்டத்திற்க...
போதைப்பொருள்களின் பிடியில் தமிழ்நாடு, பாழாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்... விழிக்க வேண்டிய பெற்றோர்!
`தமிழகத்தில் போதைக் கலாசாரம் அதிகரித்துள்ளது. பிள்ளைகள் போதைப் பாதையில் செல்லாமல் இருக்க, பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும்’ - சமீபத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படி அறிவுறுத்தியிருப்பது, போதைப் பொருள் பிரச்னையின் வீரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
செய்தியில் பார்க்கும் எந்தக் குற்றமும், செய்தி மட்டுமே அல்ல. அவை நம் ஊரில், தெருவில் நடக்கலாம், நடந்துகொண்டிருக்கலாம் என்பதுதான் இன்றைய சூழல். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் என்பது, இனி செய்தி மட்டுமேயல்ல. அது யார் வீட்டுப் பிரச்னையாகவும் மாறலாம், ஏற்கெனவே பிரச்னையாகியும் இருக்கலாம் என்ற நிதர்சனத்தை பெற்றோர் உணர வேண்டும்.
போதைப் பொருள் பற்றிய மத்திய அரசின் தரவு, 10 - 17 வயதுகளில் மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்துக்குள் செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது. சென்ற வருடம் கேரள அரசு, போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சையில் இருந்த 10 - 19 வயதினர் 600 பேரிடம் நடத்திய ஆய்வில், போதைப் பொருள்கள் எவருக்கும் எளிதாகக் கிடைப்பதாகப் பகிர்ந்திருந்தனர்.
`கடந்த 2025-ம் ஆண்டு 2,362 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்பது, சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு 10 நாள்களுக்கு முன் வெளியிட்ட தரவு. `கோவையில் போதை ஸ்டாம்ப் விற்ற இளைஞர்கள் கைது’, ’தூத்துக்குடியில் 7.5 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்’ - இவை இரண்டும் ஒரு வாரத்துக்குட்பட்ட செய்திகள்.
போதைப் பொருள்கள் புழக்கத்துக்கு தமிழகத்தின் எந்த மாவட்டமும் விதிவிலக்கல்ல. கஞ்சா, கூல் லிப் முதல் ஓபியாய்டு, சிந்தடிக் டிரக்குகள் வரை... ரகம் ரகமாகப் பரவிக் கிடக்கின்றன. விநியோகம் மற்றும் விற்பனைக்கு பள்ளி, கல்லூரிகள் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. குறிப்பாக, பல கல்லூரி விடுதிகளில் இவை வாடிக்கையாகியுள்ளன.

இந்தச் சூழலில் பெற்றோர், ‘நம் பிள்ளை அப்படிச் செல்லாது’ என்ற நம்பிக்கையைத் தாண்டி, ‘எந்தப் பிள்ளையும் இந்தச் சுழலில் சிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் கிடக்கிறது’ என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உணர்வுகள் முதல் உரையாடல் வரை, பெற்றோர்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி எதுவும் இல்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். அவுட்டிங், ஸ்போர்ட் ஆக்டிவிட்டி என அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும், நட்புக் குழுக்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். போதை வஸ்துகளைத் தவிர்ப்பதில், பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் விழிப்பு உணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். அதேசமயத்தில் மத்திய, மாநில அரசுத் துறைகள் இணைந்து போதை நெட்வொர்க்கை அழிக்க வேண்டும். அரசுகள் தங்கள் பொறுப்பை மறக்கக்கூடாது.
பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசுகள், கல்வி நிறுவனங்கள், சமூகத்துக்கு கடமை. பெற்றோருக்கு, அதுதான் வாழ்க்கையே. அரணை பலப்படுத்துவோம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
















