Gold Rate: 'மீண்டும் மீண்டுமா?' - தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு; இன்றைய தங்க வி...
கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!
7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச் சென்றார்.
அங்கே இருந்த ஈசனை `வில்லைக் காட்டிலும் வளைந்த அழகிய புருவமும், வேல்போன்ற விழிகளும் கொண்ட வேல்நெடுங்கண்ணி அம்மையுடன் ஊழிதோறும் நிலைத்திருக்கும் சோபுர நாதனே’ எனப் போற்றிப் பாடி மகிழ்ந்தார்.
அப்போதுதான் அவரோடு வந்தவர்களுக்குத் தெரிந்தது அது நான்கு யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்று.
கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், ஆலப்பாக்கம் ரயிலடி எனும் ஊரிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திருச்சோபுரம்.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 6-ம் நூற்றாண்டுக்குமுன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.
கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மீன் சின்னங்களைக் கொண்டு, இந்த ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு, மற்ற மன்னர்களாலும் திருப்பணி கண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒருமுறை வங்கக்கடல் பொங்கி எழுந்தது. திருச்சோபுரநாதர் ஆலயம் கடல்நீரில் மூழ்கியது. நாளடைவில் கடல்நீர் வற்றினாலும், கோயில் மண்ணுக்குள் புதையுண்டு போனதாம்.
ஆலயத்தை மண் மூடியிருந்த மேட்டை `கோயில் மேடு’ என்றே அழைத்து வந்தனர். அப்போது ஒருநாள். மதுரை ஆதீன திருமடத்தின் தம்பிரான் ஸ்ரீமத் ராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள் நடுநாட்டு தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு இவ்வூருக்கு வந்தார்.
இப்பகுதி மக்களிடம் சோமநாதர் ஆலயம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். அவரை மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்ற மக்கள், ‘இங்கு ஆலயம் எதுவும் இல்லை. ஆனால் இந்த இடம்தான் காலகாலமாக கோயில் மேடு என அழைக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள். மெய்சிலிர்த்த தம்பிரான் சுவாமிகள், அந்த ஆலயத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார்.
அப்போது வீசிய பலத்த காற்றில் மணல் மேட்டின் உச்சிப் பகுதி கரைந்து, ஆலயத்தின் ஸ்தூபி வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட மக்கள் மணலை அப்புறப்படுத்தி, ஆலயத்தைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தனர். பல ஆண்டுகளாக மணலுக்குள் மூழ்கிக் கிடந்த ஆலயத்தின் கருவறையைத் தரிசித்த மக்கள் பெரிதும் வியந்துபோனார்கள்.
காரணம், கருவறை தீபம் அப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. மட்டுமன்றி, சிறிது நேரத்துக்கு முன்புதான் பூஜை நடந்து முடிந்ததது போன்ற அறிகுறிகளும் தென்பட்டன!
இந்த அற்புத தரிசனம் அனைவரையும் சிலிரிக்க வைத்தது. ஊர் மக்கள் கூடி ஆலயத்தைச் சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்தியதுடன், நாள்தோறும் பூசைகள் நடத்தி வழிபடத் தொடங்கினர்.

இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தியாகவல்லி, ஆவுடையார் சந்நிதிகள் சோழர்களின் திருப்பணிக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஆதியில் இவ்வூர் மங்களபுரி என்றும், இறைவன் மங்களபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்டிருந்தார்களாம். பிற்காலத்திலேயே திருச்சோபுரம் எனும் பெயர் ஏற்பட்டதாம்.
இறைவனுக்கு சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுவது போல், அம்பிகைக்கு சத்தியாயதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி, மங்கள நாயகி, சோபுர நாயகி ஆகிய திருப்பெயர்கள் உண்டு.
விசாலமான பிராகாரங்கள், நந்தவனங்களோடு திகழ்கிறது ஆலயம். இரண்டாம் பிராகாரத்தில் நந்தி, கொடிமரத்தைத் தாண்டி முதல் பிராகாரத்தில் நுழைந்தால், தென்மேற்கு மூலையில் விநாயகர் அருள்கின்றனர்.
இந்தப் பிராகாரத்திலேயே தேவியருடன் அருளும் முருகன், கஜலட்சுமி, விசாலாட்சி உடனுறை விசுவநாதர், வீரட்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.
முதல் பிராகாரத்திலிருந்து மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில், மகாமண்டபத்துக்கு வடக்கில் அம்பிகை வேல்நெடுங்கண்ணி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள்.
மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தியபடி, கீழிரு கரங்களால் அபய - வரத முத்திரைகள் காட்டி, கருணை ததும்ப அருள்புரிகிறாள் இந்த அன்னை.
இது கல்யாணப் பரிகாரத் தலம். திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்யவேண்டும். பிரசாதமாகத் தரப்படும் அந்த மஞ்சள் குங்குமத்தைத் தினமும் நெற்றியில் வைத்துவரவேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் தீர்ந்துபோவதற்குள் திருமணம் கூடிவரும் என்பது நம்பிக்கை.
அம்பாளை வழிபட்டுவிட்டு சுவாமியின் சந்நிதிக்குச் செல்கிறோம். மேற்கு நோக்கி அருள்கிறார் திருச்சோபுரநாதர். கடற் மண்ணால் ஆனவர், அகத்திய மாமுனியால் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட லிங்கத் திருமேனியர்.

திருச்சோபுரத்தை அடைந்த அகத்தியர் சிவலிங்க வழிபாடு செய்ய சித்தம் கொண்டார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கடற்கரை மண்ணால் லிங்கம் அமைக்க முடியவில்லை. ஆகவே இறைவனைத் தியானித்து வழிபட்டு, இந்தப் பகுதியிலுள்ள அரிய மூலிகைகளைச் சேகரித்து கடற்கரை மணலுடன் சேர்த்துப் பிசைந்து பாணலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார்.
அந்தக் கணமே அவருக்குத் திருமணக்கோலம் காட்டிய அம்மையும் அப்பனும், அவர் அமைத்த லிங்கத் திருமேனியில் ஐக்கியமானார்கள்.
அகத்தியர், தான் அமைத்த லிங்க மூர்த்திக்கு 'களபுரீஸ்வரர்' என்று திருப்பெயர் சூட்டி வழிபட்டார். அத்துடன், ``யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும். ஆகவே, ஊழிதோறும் இங்கே நிலைத்திருக்க வேண்டும். இங்கு வந்து உம்மை வணங்கும் அடியார்களுக்கு அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றார்.
திருச்சோபுரநாதர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவரின் திருமேனியைத் தட்டினால் மரத்தைத் தட்டுவது போன்ற ஓசை எழுமாம். இசை ஆர்வம் உள்ளவர்கள், கல்வி-கலைகளில் மகத்தான வெற்றி பெற விரும்புவோர், இந்த தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பு. முருகனும் விநாயகரும் இங்கே வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்கள்!
தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன இந்த ஆலயத்தில். புரட்டாசி 15 முதல் 25 தேதிக்குள்; மாசியில் 5 முதல் 10 தேதிக்குள் ஒரு நாள், அஸ்தமன நேரத்தில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது விழுந்து பூஜிப்பது சிறப்பு.




















