ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர்...
மகாராஷ்டிரா தேர்தல்: 'பெண்களுக்கு முன்கூட்டியே ரூ. 1500' - பாஜகவின் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை
மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இதே போன்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் இத்தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை. இத்தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய தினத்தில் லட்கி பெஹின் திட்டத்தில் வழங்கப்படும் பணத்தை முன்கூட்டியே வழங்க மாநில அரசு திட்டமிட்டு இருந்தது.
இதற்காக டிசம்பர் மாதம் வழங்க வேண்டிய 1500 ருபாயை பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் இருந்தது. டிசம்பர் மாத தவணையோடு ஜனவரி மாத தொகையை முன்கூட்டியே சேர்த்து ரூ.3000-ஆக பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை செலுத்த திட்டமிட்டு இருந்தது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன. இது குறித்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் அதிகாரி வாக்மாரேயிக்கு கடிதம் எழுதி இருந்தது.
இதையடுத்து ஜனவரி மாத தொகையை முன்கூட்டியே பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க மாநிலத் தேர்தல் அதிகாரி வாக்மாரே தடை விதித்து இருக்கிறார்.
டிசம்பர் மாதத்திற்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கலாம் என்றும், ஆனால் ஜனவரி மாதத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகையை முன்கூட்டியே கொடுக்கக்கூடாது என்றும் வாக்மாரே மாநிலத் தலைமை செயலாளர் ராஜேஷ் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இத்திட்டத்தில் புதிதாக பெண்களைச் சேர்க்கக்கூடாது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு எந்த வித தடையும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் அதிகாரியின் உத்தரவு பா.ஜ.க கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இதேபோன்று தேர்தலுக்கு முன்பு பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
முன்னதாக மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகரசங்கராந்திக்கு முன்பு முதல்வரின் சிறப்பு பரிசாக லட்கி பெஹின் திட்டத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.3000 பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இது போன்று வழங்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்தே ஜனவரி மாதத்திற்கான தொகையை முன்கூட்டியே வழங்க தேர்தல் அதிகாரி தினேஷ் வாக்மாரே தடை விதித்து இருக்கிறார்.














