ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் 17 வயது சிறுவன் ஓட்டம்; 3 மணி நேரத்தில் ...
தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01
குழம்பி நிற்கும் காங்கிரஸ். ரீல் ஓட்டும் பிரேமலதா. 'மெகா கூட்டணி' என மணற் கோட்டை கட்டும் எடப்பாடி. கூட்டணி வலுவாக இருக்கிறது என தினசரி அலாரம் போல அலறும் திமுக. கூட்டணிக்காக காத்திருக்கிறது தவெக.
கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது 'கூட்டணி சர்க்கஸ்' - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!'
2006 சட்டமன்றத் தேர்தல் அது.
தேமுதிக என்கிற கட்சியை ஆரம்பித்து விஜயகாந்த் சந்திக்கும் முதல் தேர்தல். வன்னியர்கள் அடர்த்தியாக இருக்கக்கூடிய பாமக-வின் கோட்டையாக கருதப்படும் விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் களமிறங்குகிறார். தனித்துப் போட்டி என்பதால், தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று தன்னுடைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்துவிட்டு கடைசி வாரத்தில்தான் விருத்தாச்சலத்துக்குள் இறங்கினார்.
பாமக - திமுக கூட்டணியில் நிற்கிறது. ராமதாஸ் விஜயகாந்துக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார். சினிமா இயக்குனர்கள் கூட்டம் ஒன்று வண்டி கட்டிக்கொண்டு தொகுதிக்குள் விஜயகாந்துக்கு எதிராக வேலை பார்க்கிறது.
விசிக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. விஜயகாந்தை வீழ்த்த விசிகவும் பாமகவும் கரம் கோர்க்கிறது. 'வன்னியர்களையும் தலித்துக்களையும் பிரித்தாள விஜயகாந்த் முயற்சிக்கிறார். அதனால் அவருக்கு வாக்களிக்காதீர்கள்' என திருமா அறிக்கையே விட்டார்.

ஆனால், விருத்தாச்சலம் மக்கள் ஒன்று கூடி முரசு கொட்டினர். எதிர்ப்பிரசாரங்கள் எதுவும் எடுபடாமல் விஜயகாந்த் 10,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் விருத்தாச்சலத்தை வென்றார். தமிழகம் முழுவதும் திமுகவையும் அதிமுகவையும் எதிர்த்துக் கொண்டு, களத்தில் பாமகவையும் விசிகவையும் ஒரு கை பார்த்து தேமுதிக அன்று செய்தது மிகப்பெரிய சம்பவம்.
அப்படிப்பட்ட தேமுதிகவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. அதுதான் சோகம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 0.4% மட்டுமே. ஆனாலும், சளைக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா.
கடலூர் மாநாடு முடிந்த பிறகும் எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறோம் என சிக்னல் காட்டாமலயே இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினையும் நேரில் சந்திக்கிறார். தம்பி சுதீஷை வைத்து வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் கேப்டன் குரு பூஜைக்கு அழைப்பு விடுக்கிறார்.
அவ்வபோது விஜய்யையும் 'எங்க வீட்டுப் பிள்ளை' என பேசிவிடுகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்னமும் எந்த பக்கமும் வண்டியை திருப்பாமல் இருக்கும் தேமுதிகவின் ட்ராக் ரெக்கார்ட்தான் என்ன தெரியுமா?

கருணாநிதிக்கு விழா
கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான முரண்களை உள்ளடக்கி, சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்த முக்கியமான கட்சி தேமுதிகதான் என்றால் விஜயகாந்தின் தொண்டர்களே மறுக்கமாட்டார்கள். விஜயகாந்த் கருணாநிதியின் அபிமானி. 1991-96 சர்வாதிகாரமிக்க ஜெயலலிதாவின் அந்த முதல் ஆட்சிக் காலத்திலேயே திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு விழா எடுத்து கொண்டாடியிருந்தார்.
விஜயகாந்தின் திருமணமுமே கருணாநிதியின் தலைமையில்தான் நடந்தது. திமுகவோடு இத்தனை நெருக்கமாக இருந்த விஜயகாந்த், அரசியலென்று முடிவெடுக்கையில் திமுகவைத்தான் முதல் எதிரியாக பாவித்தார்.
மண்டப இடிப்பு சம்பவம்
அதற்கு காரணங்களும் இருந்தது. வாஜ்பாயின் அமைச்சரவையில் டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது கோயம்பேட்டில் பாலம் கட்டுவதற்காக விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்டபத்தின் பெரும் பகுதியை இடித்தனர். அதற்கு எதிராக வழக்கெல்லாம் தொடர்ந்து ஓய்ந்துப் போனார் விஜயகாந்த். 2005 இல் தேமுதிக உதயமாவதற்கு இந்த மண்டப இடிப்பு சம்பவம் முக்கிய காரணமாக அமைந்தது.
`திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தன? 'அவர்களுக்கு மாற்று தேமுதிகதான். நான் வந்தால் வறுமையை ஒழித்து விடுவேன்' என்பதை பிரதானமாக முன்வைத்தார் விஜயகாந்த். விஜய் மீது இப்போது வைக்கப்படும் விமர்சனங்களை போலவே விஜயகாந்த் மீதும் 'சினிமாக்காரர்' 'கூத்தாடி' போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
'நம்ம ஊருக்கெல்லாம் கூத்தாட வெளியூர்ல இருந்து வருவாங்க. கூத்து முடிய லேட்டாகும். கடைசி பஸ்ஸ விட்ருவாங்க. அதனால ஊர்ல தங்கிட்டு மறுநாள் கிளம்பிப் போவாங்க. கூத்தாடிங்க நிரந்தரமானவனங்க இல்லை. பிரசாரத்துக்கு வந்தா எலெக்சன் வரைக்கும் மட்டும் தங்க இடம் கொடுங்க. அதை விட்டுட்டு 5 வருசமும் கூத்தாடிய ஊருக்குள்ளயே தங்க வைக்கலாம்னு நினைக்காதீங்க' என விஜயகாந்துக்கு எதிராக விருத்தாச்சலத்தில் கடுமையாக கம்பு சுற்றினார் ராமதாஸ்.

எதுவும் எடுபடவில்லை. விஜயகாந்தின் யதார்த்தமான பேச்சும் ஏழை பங்காளனாக அவர் முன்னெடுத்த பிரசாரமும் விருத்தாச்சலத்திலிருந்து அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பியது. 2006 தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. விஜயகாந்த் மட்டும்தான் வென்றார்.
ஆனால், தேமுதிகவின் வாக்கு வங்கி ஆச்சர்யப்படுத்தியது. முதல் தேர்தலிலேயே 8.3% வாக்குகளை வாங்கியது. மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதன்பிறகுதான் திமுகவும் அதிமுகவும் விஜயகாந்தை ஒரு ஆபத்தாக பார்க்க நினைத்தனர். இரண்டு தரப்புமே விஜயகாந்துக்கு கொக்கி போட்டு இழுக்கவும் முற்பட்டனர்.
எதிலும் சிக்காத விஜயகாந்துக்கும் தேமுதிகவுக்கும் அடுத்தடுத்து எல்லாமே புலிப்பாய்ச்சல்தான். அழகிரி முன் நின்று நடத்திய திருமங்கலம் (ஃபார்முலா) இடைத்தேர்தலில் தேமுதிக 13,000 வாக்குகளை அள்ளியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தனித்தே நின்றது.
இந்த முறை வாக்கு சதவீதம் இன்னும் கூடியது. 10.1% வாக்குகளை பெற்ற தேமுதிக 35 தொகுதிகளில் 50,000+ வாக்குகளைப் பெற்றது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில் விஜயகாந்தின் தயவு கட்டாயம் வேண்டுமென ஜெ இப்போதுதான் முடிவுக்கு வருகிறார்.
களமிறங்கிய சோ... அமைந்த கூட்டணி!
2011 தேர்தலை முன்னிட்டு அதிமுகவையும் தேமுதிகவையும் கைகுலுக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார் சோ. ஜெயலலிதாவுக்கு தன் நிலையை விட்டு இறங்கி வர மனமில்லை. விஜயகாந்தும் முரண்டு பிடிக்கிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கும் போதே போயஸ் கார்டனிலிருந்து அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாக ஆரம்பிக்கிறது. விஜயகாந்த் கடுப்பாகிறார். சோ தான் இடையில் புகுந்து சமாதானம் பேசுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 சீட்டுகள் எனப் பேசி முடிக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கியது. விஜயகாந்துக்கு எதிராக வடிவேலை இறக்கி விட்டு வீதி வீதியாக அவரை கேலியும் கிண்டலும் செய்தது திமுக. திமுகவின் குடும்ப அரசியலை கேள்வி கேட்டு பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த். முடிவுகள் தமிழக அரசியலின் பெரிய சர்ப்ரைஸ்.
1991 க்குப் பிறகு திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்றிருந்தது. வாக்கு சதவீதம் 7.9% ஆக சரிந்தது. ஆனாலும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.

விஜயகாந்த்தின் வீழ்ச்சி
கொஞ்ச நாளிலேயே அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் முட்டிக் கொண்டது. சட்டமன்றத்திலேயே விஜயகாந்த் நாக்கை துறுத்தி ஆவேசமானார். தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் கூடாரம் மாற ஆரம்பித்தனர். தொகுதி வளர்ச்சிக்காக சந்திக்கிறோம் என முதல்வர் ஜெவை சந்தித்து பொக்கே கொடுக்க தொடங்கினர். கிட்டத்தட்ட விஜயகாந்த்தின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியது எனலாம்.
இந்த காலக்கட்டத்தில்தான் சமூகவலைதளங்களில் விஜயகாந்த் ஒரு ட்ரோல் மெட்டீரியலாக மாறினார். உடல் நலிவுற ஆரம்பித்தார். கட்சிக் கூட்டங்களிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவரின் நடத்தை கடும் விமர்சனத்துக்குள்ளானது.
குறையாத டிமாண்ட்
ஆனாலும் விஜயகாந்த் மீதான டிமாண்ட் மட்டும் குறையவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி விஜயகாந்தை அரவணைத்துக் கொண்டது. 14 தொகுதிகளோடு கூட்டணியின் பெரிய கட்சி எனும் பெருமையையும் பெற்றது. பாமகவுக்கும் தேமுதிகவுக்குமான பூசலை பாஜக தீர்த்து வைத்தது. இதே கூட்டணியில்தான் வைகோவும் இருந்தார். மக்கள் நல கூட்டணிக்கான விதை இங்கேதான் போடப்பட்டது.
அந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5.2% வாக்குகளை மட்டுமே தேமுதிக பெற்றது. திருப்பூரில் மட்டும் இரண்டாம் இடம் பிடித்தது. மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி. ஆனாலும் தேமுதிகவுக்கான டிமாண்ட் குறையவில்லை.

கிங்-ஆ கிங் மேக்கரா?
2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை உள்ளிழுக்க திமுக கடுமையாக முயன்றது. 'மக்களே நான் கிங்காக இருக்க வேண்டுமா கிங் மேக்கராக இருக்க வேண்டுமா?' என மாநாட்டில் விஜயகாந்த் கேட்க, 'பழம் நழுவி பாலில் விழும்' என விஜயகாந்தை எதிர்பார்த்து கோபாலபுரத்தில் காத்திருந்த கருணாநிதி பன்ச் அடித்தார்.
இந்த சமயத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வேண்டாம் என மக்கள் நல கூட்டணியை உருவாக்கியிருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் கோயம்பேடு பக்கமாக வண்டியை திருப்பினர். விஜயகாந்த் கிங் ஆக முடிவு செய்தார். 103 தொகுதிகளோடு மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஆக்கப்பட்டார் விஜயகாந்த்.
திமுகவையும் அதிமுகவையும் மேடைகளின் விளாசித்தள்ளினர் வைகோவும் திருமாவும். வெற்றிப் பெற்றால் யார் யாருக்கு என்ன அமைச்சர் பொறுப்பு என மேடையிலேயே பங்கு பிரித்து ஜாலி செய்தனர். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த வைகோ கடைசி நிமிடத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை என ஜகா வாங்கினார். தேர்தல் முடிவுகளை முன்பே அனுமானித்துவிட்டார் போல!
இந்த 2016 தேர்தல் விஜயகாந்துக்கு பலத்த அடி. தேமுதிகவின் வாக்கு வங்கி 2.4% ஆக சரிந்தது. மக்கள் நல கூட்டணி பிரித்த வாக்குகள் திமுகவையும் காவு வாங்கியது. அதிமுக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. 2016 தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்தின் உடல்நிலை இன்னும் மோசமானது. வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கெல்லாம் சென்று வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு கபடி ஆடியது தேமுதிக.
என்.டி.ஏவோடு கூட்டணி பேசும்போதே திமுக பக்கமும் துண்டு போட பார்த்தது தேமுதிக. பியூஸ் கோயல் விஜயகாந்தின் வீட்டுக்கு வந்து பேசினார். அதேநேரத்தில் தேமுதிகவின் இன்னொரு தூதுவர் குழு துரைமுருகனின் வீட்டுக்கு போய் பேசினர். அதை துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் போட்டுடைத்து தேமுதிகவை சங்கடப்படுத்தினார். மோடியின் தமிழக வருகையின் போது பிரசார மேடையில் விஜயகாந்தின் படத்தை வைப்பதும் எடுப்பதுமாக இருந்தனர்.
சரிவோ சரிவு..!
இறுதியில் எல்லா வழிகளும் அடைபட என்.டி.ஏவுக்குள்ளேயே வந்து சேர்ந்தது தேமுதிக. அந்த தேர்தலில் தமிழகத்தில் என்.டி.ஏவுக்கு பலத்த அடி. தேமுதிகவுக்கு அதைவிட பெரிய அடி. வாக்கு வங்கி 2.2% என இன்னும் சரிந்தது. இந்த வீழ்ச்சி 2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தேமுதிகவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள் என அதிமுகவிடம் தேமுதிக வெளிப்படையாகவே பல முறை கேட்டது. தாமதப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்த எடப்பாடி, தேமுதிகவின் எதிர்பார்ப்புக்கு பாசிட்டிவ் சிக்னல் காட்டவில்லை. தேமுதிக 23 தொகுதிகள் எதிர்பார்க்க, 15 தொகுதிகளுக்குள் முடிக்க நினைத்தது அதிமுக. பேரம் ஒத்துவராமல் போகவே அவசரமாக மா.செக்கள் கூட்டத்தை கூட்டி அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது தேமுதிக.
'அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்த நாள்தான் எங்களுக்கு தீபாவளி, தமிழ்நாடு முழுக்க அதிமுகவை டெபாசிட் இழக்க செய்வோம்' என சுதிஷ் ஆவேசமானார். எடப்பாடியின் கறாரால் என்.டி.ஏவில் இடம் கிடைக்காத தினகரனுடன் தேமுதிக கரம் கோர்த்தது. 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு. இந்த முறை அடி இன்னும் வலுவாக இருந்தது. தேமுதிகவின் வாக்கு வங்கி 0.4% ஆக குறைந்தது.

மறைந்தார் விஜயகாந்த்
மோசமான விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மக்கள் பரிதாபப்பட்டனர். ஆனால், அதெல்லாம் வாக்காக மாறவில்லை. 2023 டிசம்பரில் விஜயகாந்த் மறைந்தார். எப்போதுமே ஒரு பெரிய தலைவர் மறைகையில் அந்த கட்சியின் மீது அனுதாபம் கூடும். அது தேமுதிகவுக்கும் நடந்தது. விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்து திமுகவும் நெருக்கம் காட்டியது. பாஜகவை கழட்டி விட்டிருந்த அதிமுகவும் தேமுதிகவை நெருங்கியது.
மெகா கூட்டணி அமைக்கிறேன் என்ற எடப்பாடியின் படோபட அறிவிப்பை நம்பி 2024 தேர்தலுக்கு அதிமுகவோடு சேர்ந்த ஒரே பெரிய கட்சி தேமுதிகதான். இந்த முறை தேமுதிகவுக்கு 5 தொகுதிகள். எல்லாமே தோல்விதான். விருதுநகரில் மாணிக்கம் தாகூருக்கு மட்டும் விஜய பிரபாகரன் கடும் போட்டியளித்தார். ஆனாலும் வெல்லவில்லை. 'சின்னப்பையன் ஜெயிச்சிட்டு போறான்னு விட்டிருந்தா திமுக மேல மதிப்பு கூடியிருக்கும்' என தாய்ப்பாசத்தில் உணர்ச்சிப் பொங்க பேசினார் பிரேமலதா.
சில மாதங்களிலேயே அதிமுகவோடும் பஞ்சாயத்தை கூட்டியது தேமுதிக. ஒத்துக்கொண்ட ராஜ்ய சபா சீட்டை தரவில்லை எனக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக. இதோ 2026 தேர்தல் நெருங்கி விட்டது. எல்லா கட்சிகளை போலவும் ஒரு பஸ்ஸை கிளப்பிக் கொண்டு 'இல்லம் தேடி உள்ளம் நாடி' என ஒரு சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்திருக்கிறார் பிரேமலதா.
ஆளுங்கட்சியை அளவாக விமர்சிக்கிறார், எதிர்க்கட்சியோடும் இணக்கம் காட்டுகிறார், விஜய்யோடும் நட்பு காட்டுகிறார். இப்படி எல்லா பக்கமும் தன்னுடைய ஆப்சன்களை ஓபனாக வைத்துக் கொண்டு கடை விரித்து காத்திருக்கிறது தேமுதிக.
சட்டமன்ற பதிவேட்டில் தேமுதிக உறுப்பினர்கள் கையெழுத்திட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கேப்டன் கட்சி என்கிற பெயரை காப்பாற்ற ஒன்றிரண்டு பேரையாவது சட்டமன்றத்துக்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் தேமுதிக தொண்டர்களின் விருப்பம். தனக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று தனயனுக்கு ஒன்று மீதமிருந்தால் பார்த்தசாரதிக்கு ஒன்று என மைண்ட்டுக்குள்ளேயே டிக்கெட் விநியோகத்தை முடித்து(?) வைத்திருக்கும் பிரேமலதா என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!
(தொடரும்)














