மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்...
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.
மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராகவும் இருந்து வந்துள்ளார்.
இன்னொருபக்கம், பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது: 21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித் மற்றும் இவர்களது நண்பர்கள் ஒன்றிணைந்து அன்பு பாய்ஸ் என்ற பெயரில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது, ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் இறங்கிப் பிடிப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ஜல்லிக்கட்டில் இன்பரசன், 'அன்பு பாய்ஸ்' பெயரில் அவிழ்க்கப்பட்ட காளையைப் பிடித்துள்ளார். இதனால், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் கோபமடைந்திருந்தனர்.
மேலும், 'அன்பு பாய்ஸ்' காளையை அடக்கிய இன்பரசன், அந்த காளையை அடக்கியது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார். இதனால், மேலும் 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதற்கிடையில்தான் இன்பரசன் காளைகளைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு, காளை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இன்பரசன் வளர்க்கும் காளை எந்த ஜல்லிக்கட்டிலும் காளையர்களிடம் பிடிபடாத நிலையில், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் அந்த ஜல்லிக்கட்டு காளையை வம்பு இழுத்து இன்ஸ்டா ரீல்ஸ், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர்.

இதனால், கோபமடைந்த இன்பரசன் கடந்தாண்டு, அக்டோபர் 20-ம் தேதி ராயப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 'அன்பு பாய்ஸ்' இளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சம்பட்டி விடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்த நிலையில், பின்னர் அவர்களும் பிணையில் வெளிவந்துள்ளனர்.
பின்னர், காவல்துறையினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இன்பரசன் தரப்பினரையும், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்களையும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இரு தரப்பினருக்கும் எந்தவித பிரச்னையும் செய்யக்கூடாது என்று சமாதானம் பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், 'அன்பு பாய்ஸ்' இளைஞர்கள் இன்பரசன் மீது உள்ள கோபத்தை மனதிலேயே வைத்திருந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை அடுத்த அழகம்மாள்புரத்தில் நடைபெற்று வரும் கட்டடப் பணிக்கு சென்ட்ரிங் வேலை செய்ய இன்பரசன் மற்றொரு நபருடன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, 'அன்பு பாய்ஸ்' என்று எழுதப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு நபர்கள் இன்பரசன் வந்த இருசக்கர வாகனத்தை, ஒரு இருசக்கர வாகனத்தால் மோதியுள்ளனர். இதில், சுதாரித்துக் கொண்ட இன்பரசன் இருசக்கர வாகனத்தில் இருந்து ஓடத் தொடங்கியுள்ளார்.
ஆனாலும், ஓடிய இன்பரசனை இளைஞர்கள் துரத்தி, அவர்கள் எடுத்து வந்த கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் இன்பரசன் பணி செய்ய வந்த கட்டடத்திற்கும், அழகாம்பாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நடுவே வைத்துக் கொடூரமாக வெட்டி விட்டு இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் இன்பரசன் துடிதுடித்துக் கிடந்த நிலையில், இது குறித்து அப்பகுதியினர் வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு இன்பரசனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான போலீஸார், இந்தக் கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் இன்பரசனைக் கொடூரமாக வெட்டி கொலை செய்த 'அன்பு பாய்ஸ்' குழுவைச் சேர்ந்த பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது:21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித், பாப்பான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ரோகேஷ், சீனு, திருமூர்த்தி உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து, அந்த ஆறு நபர்களையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இன்பரசனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்பரசனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்பரசனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ஏற்கனவே இன்பரசனுக்கும், கொலை செய்த குற்றவாளிகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் காவல்துறையினர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதால்தான் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள முள்ளூர் பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது சம்பந்தமான முன்விரோதத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



















