ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளைய...
ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.

அந்த லிங்கை திறந்தவுடன் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் புகாரளித்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. குஜராத் சென்ற தனிப்படை காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம் மற்றும் 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6.39 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணன்,

“வட மாநிலத்தைச் சேர்ந்த 14 பேரை ஒரே நேரத்தில் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தது இதுவே முதல்முறை” என்று கூறினார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















