Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?
சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர் மூலம் நீலாங்கரையைச் சேர்ந்த இன்ஜினீயர் பீட்டர் அறிவரசன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.
பின்னர் பீட்டர், உமாவிடம், மகளுக்கு அந்த மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார். அதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனப் பீட்டர் கூற, உமாவும் ஓகே கூறியிருக்கிறார். இதையடுத்து 30.05.2025-ம் தேதி 2 தவணைகளாக 10 லட்சம் ரூபாயை பீட்டர் அறிவரசனிடம் உமா கொடுத்திருக்கிறார். இதையடுத்து எப்படியும் கல்லூரியில் சீட் கிடைத்துவிடும் எனப் பீட்டர் நம்பிக்கை கொடுத்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில் கல்லூரியில் சீட் உறுதியாகி விட்டது. அதனால் உடனடியாக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறிய பீட்டர், 1.65 லட்சம் ரூபாயைக் கேட்டிருக்கிறார். அதனால் சந்தோஷமடைந்த உமா, 01.08.2025-ம் தேதி பீட்டரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பீட்டர் வாக்குறுதி அளித்தபடி கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.
அதனால் கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி உமா கேட்க, அவரை மிரட்டியிருக்கிறார் பீட்டர். இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் உமா, இன்ஜினீயர் பீட்டர் மீது மோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பீட்டரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் உமாவிடம் பணம் வாங்கி ஏமாற்றியதை பீட்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீட்டர், சொந்தமாக பிசினஸ் செய்து வந்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தனக்குத் தெரிந்தவர்களிடம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
உமா கொடுத்த புகாரில் கைதான பீட்டர், இன்னும் சிலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் தொடர்ந்து பீட்டரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.














