செய்திகள் :

மகளிர் மாநாடு: ”கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை மட்டுமே உருவாக்கலாம்” - கனிமொழி சாடல்

post image

தஞ்சாவூரில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது, ''அனைவருக்கும் அன்பு வணக்கம். கலைமகளின் கரம் தந்து, கல்வியிலே தரம் தந்து, நல்லாட்சிக்கான வரம் தந்த நம் முதல்வரை வணங்குகிறேன்.

உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நடுமலரே, ஒளி உமிழ் புதுநிலவே, அன்பே, அறிவே, அழகே, உயிரே, இன்பே, இனிய தென்றலே, பனியே, கனியே, மரகத அணியே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழைப் போற்றினாலும், "தமிழை தமிழே" என்று கூறுவதுதான் பெருமை, அழகு என்பார் முதல்வர்.

திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி
திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி

"ஓடு வளர் காடு தணி ஓடி விளையாடுகின்ற பீடு மிகு மாநிலமும், பாடு திசை ஜோடி குயில் தாலமொடு பாவம் மிகு கானமயில் புள்ளினமும், மட்டுப்படிகற்ற கொடைச் சிற்றடர் வெற்றிச் சீர் பெற்றிடவும் உல, மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! மானம் காக்கப் புறப்படுக மறவர் சேனை! இன்புற்றான் என் தமிழன்."

இங்கு வந்த இந்தினை எதிர்ப்பதற்கு இவையின்றி செங்குத்துத் தூணைப் போல் இருக்கின்றானா அல்லது அங்கத்தில் துடிப்பின்றி கிடக்கின்றானா? ஐயோ பாவம், அவனுக்கு சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள் என்று இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை அரியணை ஏற்றியது நம் திராவிட மாடல் ஆட்சி தானே!

தடியூன்றி நடக்கின்ற பெரியாரும் இல்லை, தமிழூன்றி நடக்கின்ற கலைஞரும் இல்லை, கொடியேற்றுகின்ற கழகத்தைத் தொடங்கி வைத்த பேரறிஞர் அண்ணாவும் இல்லை. இப்படி இந்தப் படிக்கட்டுகளை அமைத்திட்ட எந்தத் தலைவர்களும் பக்கத்தில் இல்லை என்றாலும், இந்த மூன்று வெடிமருந்தையும் தன் மூளைக்குள் தாங்கிக்கொண்டு தமிழகத்தை வென்றெடுத்தார் நம் முதல்வர்.

அதுமட்டுமல்லாமல், "அன்பு உடன்பிறப்புகளே" என்ற ஒற்றைக் காவியத்தை வைத்தார் கலைஞர் என்றால், "அப்பா" என்ற ஒற்றை வார்த்தையிலே வரலாற்றைப் படைத்தவர் நம் முதல்வர்.

திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின்
திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உமிழ்நீரைக் கூட விழுங்குவதற்கு நேரமின்றி ஊரெல்லாம் உரையாடி உழைப்பவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் கூற்றிற்கு இணங்க, பசித்த ஒரு குழந்தையின் முகத்தைக் கண்ட அடுத்த கணமே அவர் கொண்டு வந்தாரோ ஒரு சட்டம், அதுவே காலை உணவுத் திட்டம்.

"கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டைய உரிக்கும் சுடுகாட்டில் அவன் பட்டை வேகம்" என்ற வரிகளுக்கு இணங்க, நம் முதல்வர் செயல்படுத்திய "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக, ஏரோட்டுபவரின் மகன் ஏரோப்ளேன் ஓட்டுகின்றான், களை பறிப்பவரின் மகன் கலெக்டர் ஆகின்றான்.

பெண்கள் விண்வெளிக்கே போனாலும், அவர்கள் போக முடியாத ஒரே இடம் கோவிலின் கருவறை. "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற திட்டத்தால் இனி கரு சுமக்கும் பெண் கூட கோவிலின் கருவறைக்குள். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்ற வாதத்தை மாற்றி, பெண்களுக்கு சொத்துரிமை தந்து, வாழ்வுரிமை தந்து, கல்வியைத் தந்து, கல்விக்குத் தொகையும் தந்து, இடஒதுக்கீடு தந்து, சம உரிமையைப் படைத்து, பெண்களின் தடைகளை உடைத்து, பெண்களின் வழித்தடத்தை வாழ்க்கைத் தடமாக மாற்றி வரும் ஒரு சகாப்த நாயகர் நம் தமிழ்நாட்டின் முதல்வர்.

திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின்
திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின்

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா" என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற மாபெரும் மாநாட்டை நடத்தி பெண்மையைப் போற்றுவதுதான் நம் திராவிட மாடல் அரசியலுடைய புரட்சி. அதுமட்டுமல்லாமல் நான் இன்னொன்னு கருத்தைச் சொல்கிறேன்.

​விதவைக்கு கைம்பெண், ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, என்று பெயரிட்ட தாயுமானவர் கலைஞரின் வழியில், பெண்களுக்கு "இலவசப் பேருந்து" என்று இல்லாமல் "கட்டணமில்லாப் பயணம்", பெண்களுக்கு உதவித்தொகை என்று இல்லாமல் "உரிமைத் தொகை", புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று திட்டங்களின் பெயர்களில் கூட பெண்களுக்கு சுயமரியாதையைத் தருவது நம் திராவிட மாடல் ஆட்சி தானே!

ஒரு பெண் இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் வெற்றிப் புன்னகையோடும், "நம்மால் முடியும்" என்ற நம்பிக்கையுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் முதல்வர் இந்த நாட்டை ஆள்கிறார் என்பது மட்டுமல்ல, நம் அப்பா இந்தப் பெண் சமூகத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார் என்பதே எங்கள் நம்பிக்கை.

விளையாட்டுத் துறையில் முக்கியமாகப் பெண்கள் - கபடியில் கண்ணகி, நாகரத்தினம், கார்த்திகா; கிரிக்கெட்டில் ஜெமிமா என முன்வருவதற்கு காரணமே நம்முடைய திராவிட மாடல் அரசு தானே!

திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி

கொள்கை இல்லாத தலைவர்கள் நல்ல ரசிகர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், ஒருபொழுதும் நல்ல தலைவர்களை உருவாக்க முடியாது. திராவிடத்திற்கு என்றும் இல்லை வறட்சி, என்றும் இருப்பது வளர்ச்சி, எழுச்சி! அதற்குச் சாட்சி நம் முதல்வருடைய ஆட்சி. நாடு போற்றும் அந்த ஐந்தாண்டு, தொடரட்டும் பல்லாண்டு! மீண்டும் நீங்களே முதல்வர், மீண்டும் மீண்டும் நீங்களே முதல்வர்'' என்றார்.

”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற... மேலும் பார்க்க

மீண்டும் மொழியைக் கையிலெடுக்கும் திமுக - தேர்தலில் கைகொடுக்குமா?

தியாகிகள் தினம்!தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுகூரும் விதமாக ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று முந்தினம் செ... மேலும் பார்க்க

மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி

தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெற்றது.இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி உள்ள... மேலும் பார்க்க

"அமெரிக்கா செய்துவிட்டது; ஆனால், தென் கொரியா செய்யவில்லை" - ட்ரம்ப் வரியை உயர்த்த காரணம் என்ன?

தென் கொரியாவிற்கு வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.ஏன் இந்த உயர்வு? இதற்கான பதிலை தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் கூறியு... மேலும் பார்க்க