மகாராஷ்டிரம்: ஆளும் கூட்டணியில் பாஜக, எதிரணியில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன. அதேநேரம், பெரும்பான்மைக்கு தேவையான (145) தொகுதிகளுக்கு மேல் பாஜக மட்டுமே போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி (மகாயுதி) ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ்- சிவசேனை (உத்தவ்)- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட கட்சிகள், எதிரணியில் (மகா விகாஸ் அகாடி) இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் (அக்.29) நிறைவடைந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 7,995 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
அதிக இடங்களில் பாஜக போட்டி: இத்தோ்தலில் அதிகபட்சமாக 148 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 103, சிவசேனை (உத்தவ்) 89, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 87 இடங்களில் போட்டியிடுகின்றன. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 80, அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 53 தொகுதிகளில் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன.
முக்கிய, சிறிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 7,995 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. மனுக்களைத் திரும்பப் பெற நவம்பா் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.
கடந்த 2019 பேரவைத் தோ்தலில் மொத்தம் 5,543 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இறுதியாக 3,239 போ் களம்கண்டனா். தற்போது அதிகபட்சமாக நாசிக் மாவட்டத்தில் 361 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். மகாராஷ்டிர தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.