`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன...
`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி
தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா.
சக்கரவர்த்தி என்னும் அந்தத் தொண்டர் 90 களிலிருந்து எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவராம். மதுரையைச் சேர்ந்தவர். கட்சியின் பெயர் அறிவிக்கும் விழாவை முடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை நிறுத்திப் பேசினோம்.

‘’இன்னைக்கு பன்னீர்செல்வம்.. சுற்றுப் பயணம் போறாராம். ஐம்பது வருஷமா சோறு போட்ட இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீங்கனு கேக்கப் போறாராம். காலையில் செய்தி பார்த்தேன். வயிறெல்லாம் எரிஞ்சது. திங்கற சோறு அவருக்கெல்லாம் எப்படிச் செறிக்குது தெரியலை. பேசாம அரசியல்ல இருந்து ஒதுங்கிடலாமே. என்னை எடுத்துக்கோங்க. 40 வருஷத்துக்கு மேல கட்சியில இருந்தேன். ஒரு கிளைச் செயலாளர் பதவி கூட கிடைக்கலை. மதுரையில் இருக்கிற செல்லூர் ராஜ் எதுவும் எனக்கு கிடைக்காதபடி பார்த்துகிட்டார். அம்மா இருக்கிற வரை அவரைச் சந்திக்க கூட முடியாதபடி செஞ்சார். அவங்க மறைஞ்ச பின்னாடி திமுகவுக்குப் போகலாம்னா போயிருக்கலாமே. அப்படி போய் சோறு சாப்பிடணுமானு லெட்டர் பேடு கட்சியாகன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்னு தனியா ஒரு கட்சியை ஆரம்பிச்சு எம்..ஜி.ஆர் புகழ்பாடிட்டு இருந்தேனே, அப்படி இருந்துட்டுப் போக வேண்டிதானே. அதை விட்டுட்டு எதிரிகள் முகாம்ல போய் தஞ்சமடைஞ்சிருக்காரே’’
- எடுத்த எடுப்பிலேயே ஒ.பி,எஸ் மீது பாய்ந்தவரை கூல் செய்து, ‘அதான் தனிக்கட்சி தொடங்கிட்டீங்கல்ல இனி இரட்டை இலை பத்தி எதுக்கு யோசிக்கணும்’ என்றோம்.

‘’அதுவும் சரிதான்’ என ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..
‘’எம்.ஜி.ஆர் ரசிகனா இருந்தேன். ஆள் பார்க்க கொஞ்சம் அவர் சாயல்ல இருக்கிறதால் மதுரை எம்.ஜி.ஆர்.ன்னே கூப்பிடுவாங்க. அதிமுகவுல உறுப்பினர் கார்டு வச்சிருந்தேன். இப்பக் கூட அந்தக் கார்டு இருக்கு. கிழிச்சுப்போடக் கூட மனசு வரலை. அம்மா மறைவுக்குப் பிறகு ஒருத்தர் தலைமையில வந்து கட்சி திரும்பவும் ஆட்சியைப் பிடிக்கும்னு லட்சோப லட்சம் தொண்டர்களைப் போலவே நானும் நம்பினேன். ஆனா இங்க ஆளாளுக்கு நாட்டாமை பண்ணி ஒரு வழி ஆக்கிட்டாங்க. பழனிசாமியும் சுயநலத்தோட தான் செயல்படறார். அதனால சிவனேன்னு புரட்சித் தலைவர் பெயர் சொல்ல ஒரு கட்சியை நடத்துவோம்னு அம்மா மறைஞ்சதுமே பதிவு பண்ணிட்டேன்.
எப்படியும் இவங்க யாரும் சேரப்போறதில்லைனு இப்பதான் ரெண்டு மாசமா அலைஞ்சு சின்னமும் வாங்கி வச்சிருந்தேன்.
சின்னம்மாவை பசும்பொன் வந்தப்ப ரெண்டு தடவை ஏற்கனவே பாத்துப் பேசியிருக்கேன், அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்க்க அவங்கதான் சரியான ஆள்னு எனக்குத் தோணுச்சு. பன்னீர், பழனிசாமி ரெண்டு பேருமே முதலமைச்சராக காரணம் அவங்கதானே/ இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல அதிமுகவுல முக்கால்வாசி பேர் வெள்ளையும் சொள்ளையுமா திரியறதுக்கு காரணமே அவங்கதான்.
அவங்க வந்து புதுக்கட்சி தொடர்பா பேசினாங்க. மறுப்பு எதுவும் சொல்ல முடியலை. அதனால சம்மதிச்சிட்டேன். வர்ற தேர்தல்ல கட்சி போட்டியிடும். கூட்டணி தொடர்பான மத்த விஷயங்களை அவங்க பார்த்துப்பாங்க. இறுதியானதும் அவங்களே சொல்வாங்க’’ என்றவரிடம். கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு என்றோம்.
``நிறுவன தலைவர் நானே தான். அவங்க செயலாளரா இருந்து கட்சியை நடத்துவாங்க’’ என்கிறார்.














