NRI களுக்கான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டு வழிகாட்டல் - கட்டணமில்லா வகுப்பு!
மகாராஷ்டிரா: வெள்ளத்தால் 200 கிராமங்கள் துண்டிப்பு; 1 லட்சம் பேர் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்
மும்பை உட்பட் மகாராஷ்டிரா முழுவதும் இந்த வார தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது.
அதோடு மாவட்டம் முழுவதும் மழை நீரில் பாலங்கள் மற்றும் சாலைகள் மூழ்கியுள்ளன. இதனால், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஹானு தாலுகாவில் உள்ள சைவன்-வாகடி சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தைக் கடக்கும்போது அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது. டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பயணிகள் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறுகள் மூலம் 6 பேரையும் மீட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. போர்டி மற்றும் கோல்வாடி போன்ற இடங்களில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

பல வீடுகளுக்குள் மூன்று முதல் நான்கு அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 183.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தஹானு மற்றும் தலசாரி தாலுகாக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு நிரம்பி வழியும் ஆறுகள் மற்றும் நீரில் மூழ்கிய சாலைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 891 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தகானு, தலசாரி ஆகிய இரண்டு தாலுகாவிலும் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
இதனால் மொபைல் சேவையும் பாதிக்கப்பட்டது. தலசாரி, தஹானு, வாடா, விக்ரம்காட், ஜவ்ஹர் மற்றும் மொகடா போன்ற பகுதியில் இருக்கும் 16 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால் அங்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சேதமடைந்ததாலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் மின்சாரம் இன்றி தவித்தனர். அணைகள் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்குக் கூடுதல் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் விரைந்துள்ளன. தகானுவிற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறைவிடப்பட்டுள்ளது.





















