செய்திகள் :

மும்பை கனமழை: "நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா..."- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர்

post image

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக மான்கூர்டு பகுதியில் மன்குர்த் ஜனதா நகரில் இருந்த சட்டவிரோத நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 38 வயதான அக்தர் ஜஹான் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் (3 முதல் 14 வயது வரை) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களுடன் விளையாட வந்த பக்கத்து வீட்டு 6 வயது சிறுமியும் இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் கணவரான மொய்னுதீன் வாஜித் அலி ஷா மட்டுமே இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

மொய்னுதீன்
மொய்னுதீன்

தொடர் மழையினால் பக்கத்து கட்டிடம் பாதுகாப்பற்றதாக மாறி, விரிசல் விழுவதையும் சாய்வதையும் கண்ட அக்தர் ஜஹான் மற்றும் அவரது கணவர், அடுத்த நாள் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மாற திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் மாறுவதற்கு முன்பாகவே இந்தத் துயரம் நிகழ்ந்துவிட்டது.

இடிந்து விழுந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அக்கம் பக்கத்தினர் தங்களின் வீடுகளை அவசரமாகக் காலி செய்யத் தொடங்கியிருந்தனர். அக்தர் ஜஹான் குடும்பம் சட்டவிரோத கட்டிடத்திற்கு அருகில் தகர கூரை வீடாக இருந்தது.

அக்தர் ஜஹானும் தனது குடும்பத்துடன் வெளியேறுவதற்காக பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்தது என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாக வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பிய கணவர் மொய்னுதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாம் நாளை வேறு இடத்திற்கு மாறிவிடலாம் என்று எனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தேன். ஆனால், நாங்கள் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பாகவே, பக்கத்து கட்டிடம் எங்கள் வீட்டின் மீது இடிந்து விழுந்து, உள்ளே இருந்தவர்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்துவிட்டது" என்று கண்ணீருடன் கூறினார்.

இந்த ஆபத்தான கட்டிடம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் வந்திருந்தும், மாநகராட்சி ஏன் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தையடுத்து, அப்பகுதியில் உள்ள மற்ற அனைத்து அபாயகரமான கட்டிடங்களையும் கண்டறிந்து, அவற்றை உடனடியாக இடிப்பதற்கும் அல்லது மக்களை வெளியேற்றுவதற்கும் அவசர உள்கட்டமைப்பு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, அதன் சுவர்களில் பெரிய விரிசல்கள் விழுந்தன, அழுத்தத்தின் காரணமாகத் தரையிலிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும் அதிகப்படியான மழையால் அடித்தளம் பலமிழந்து கட்டிடம் ஒரு பக்கமாகச் சாய்ந்தது.

இந்த ஆபத்தான அறிகுறிகளைக் கண்டவுடன், அந்த நான்கு அடுக்கு கட்டிடத்தில் வசித்து வந்த அனைத்துக் குடும்பங்களும் தங்களின் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு உடனடியாகவும் பத்திரமாகவும் கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

ஆனால், அந்தக் கட்டிடம் சாய்ந்து இடிந்து விழுந்தபோது, அதன் ஒட்டுமொத்த எடையும் நேராக பக்கத்தில் தாழ்வாக இருந்த தகரக் கூரை வீடுகளின் மீது விழுந்தது. இதனால், உள்ளே பொருட்களைப் மூட்டை கட்டிக் கொண்டிருந்த அக்தர் ஜஹான் மற்றும் ஐந்து சிறு குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பெய்து வரும் கனமழைக்கு இது வரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக... மேலும் பார்க்க

"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

கேரள மாநிலம், ​வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை; மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் மீட்புக் குழுவினர்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லாடி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் சிக்கியுள்ளனர். போக்குவரத்திற்காக இரட்டை சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் மழை... மேலும் பார்க்க

ஆங்காங்கே நிலச்சரிவு... சாலைகளை மூழ்கடித்த வெள்ளம் - மகாராஷ்டிராவை திணறடிக்கும் கனமழை!

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

மும்பையைப் புரட்டிப்போட்ட கனமழை: நான்கு மாடிக் கட்டடம் இடிந்து 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும... மேலும் பார்க்க