`தமிழகத்தில் மின்தடைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் உடனடி அமல்' - ‘RTEP’ என...
FIFA-வின் செல்லப் பிள்ளையா அர்ஜென்டினா? - எகிப்துக்கு எதிரான தீர்ப்புகளால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, எகிப்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடங்களில் அரங்கேறிய இந்த அசாத்திய மீள்வருகை ஒருபுறம் இருந்தாலும், போட்டியின் நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் கால்பந்து உலகம் கொந்தளித்துப் போயுள்ளது.
போட்டி முடிவை தீர்மானிக்கும் பல முக்கிய தருணங்களில், நடுவர் ஃபிராங்கோயிஸ் லெடெக்ஸியரின் முடிவுகள் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஒருதலைபட்சமான தீர்ப்புகளால், அர்ஜென்டினா "FIFA-வின் செல்லப் பிள்ளையா?" என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உரக்க எழுப்பி வருகின்றனர்.

கடைசி நிமிடங்களில் மாறிய ஆட்டம்!
அட்லாண்டாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், யாசர் இப்ராஹிம் மற்றும் மொஸ்தஃபா ஜிகோ ஆகியோரின் கோல்களால் எகிப்து அணி 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. போட்டி முடிய வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், எகிப்தின் வரலாற்று வெற்றி உறுதியெனக் கருதப்பட்டது.
ஆனால், லயோனல் மெஸ்ஸியின் மாயாஜாலம் ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியது. 79-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோவும், 83-வது நிமிடத்தில் மெஸ்ஸியும் கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலையானது. இறுதியாக, கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் அடித்த கோலால் அர்ஜென்டினா அணி வெற்றியைப் பறித்தது.
சர்ச்சைகளின் அணிவகுப்பு!
அர்ஜென்டினாவின் இந்த வெற்றி ஒருபுறம் இருக்க, போட்டியின் நடுவர் முடிவுகள்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. முதல் பாதியில், அர்ஜென்டினா வீரர் நஹுவல் மோலினா, எகிப்து வீரர் இமாம் அஷூரை கை நீட்டி தள்ளியது ரீப்ளேக்களில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், நடுவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதுவே சர்ச்சைகளின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இரண்டாம் பாதியில், அர்ஜென்டினாவின் பெனால்டி பாக்ஸில் நிக்கோலஸ் டாக்லியாஃபிகோவால், முகமது சாலா தட்டிவிடப்பட்டார். ரீப்ளேக்களில் டாக்லியாஃபிகோ, சாலாவின் கால் விரலை மிதித்தது போலத் தெரிந்தது. இது அப்பட்டமான பெனால்டி என எகிப்து வீரர்கள் முறையிட்டும், நடுவர் மறுத்துவிட்டார். VAR தொழில்நுட்பமும் இதில் தலையிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், எகிப்து அடித்த ஒரு கோலும் VAR மூலம் நிராகரிக்கப்பட்டது.

கொந்தளித்த ரசிகர்கள்!
இந்த தொடர் சம்பவங்களால், எகிப்து பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கடும் கோபமடைந்தனர். சமூக வலைதளங்களில், "VAR தொழில்நுட்பம் எகிப்து வீரர்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா?", "பட்டப்பகலில் அரங்கேறும் ஏமாற்று வேலை இது" போன்ற பதிவுகளுடன் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். சிலரோ, கத்தார் உலகக் கோப்பையிலிருந்தே அர்ஜென்டினாவுக்கு ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், இந்த வெற்றி சர்ச்சைகளின் நிழலிலேயே பார்க்கப்படுகிறது. முக்கியமான நாக்-அவுட் போட்டியில் நடுவர்களின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுவது, உலகக் கோப்பையின் நம்பகத்தன்மை மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.!



















